காபோன் கடற்பரப்பில் மூழ்கிய மாபெரும் எண்ணெய் அகழ்வாராய்ச்சித் தளம்

காபோன் கடற்பரப்பில் மூழ்கிய மாபெரும் எண்ணெய் அகழ்வாராய்ச்சித் தளம்: 5 தொழிலாளர்கள் மாயம்!

அட்லாண்டிக் பெருங்கடலில் ஆப்பிரிக்க நாடான காபோன் (Gabon) கடற்பரப்பில் ஒரு மாபெரும் தொழில்துறை விபத்து அரங்கேறியுள்ளது.

நோர்வே நாட்டைச் சேர்ந்த ‘BW எனர்ஜி’ (BW Energy) நிறுவனத்தின் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்காகக் கடலில் இயங்கிக்கொண்டிருந்த ‘புராஸ்பெக்டர் 5’ (Prospector 5) என்ற பிரம்மாண்டமான எண்ணெய் அகழ்வாராய்ச்சித் தளம், நேற்றிரவு (சனிக்கிழமை) திடீரெனக் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

 

இந்தத் தளத்தை நேரடியாக நிர்வகித்து வந்த ‘போர் ட்ரில்லிங்’ (Borr Drilling) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

 

நேற்றிரவு உள்ளூர் நேரப்படி 8:37 மணியளவில் இந்த விபத்து நேர்ந்த போது, அந்தத் தளத்தில் மொத்தம் 115 தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.

 

நடுக்கடலில் தளம் மூழ்கத் தொடங்கியதும், உடனடியாக முடுக்கிவிடப்பட்ட மாபெரும் மீட்புப் பணிகளின் ஊடாக 110 பேர் அதிர்ஷ்டவசமாகப் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

 

எனினும், கடலில் காணாமல் போன அந்த எஞ்சிய ஐந்து தொழிலாளர்களின் நிலை என்னவென்பது இதுவரை அறியப்படவில்லை.

 

அவர்களுக்கான தேடுதல் வேட்டை தற்போது அட்லாண்டிக் கடற்பரப்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. “காணாமல் போனவர்களையும், இந்த விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் நினைத்து நாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம்.

 

மீட்புப் பணிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதே எங்களது தற்போதைய தலையாய கடமையாகும்” என போர் ட்ரில்லிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி புருனோ மொராண்ட் (Bruno Morand) தெரிவித்துள்ளார்.

 

ஐரோப்பிய நிறுவனங்கள் ஆப்பிரிக்கக் கடற்பரப்புகளில் முன்னெடுக்கும் இத்தகைய மாபெரும் அகழ்வாராய்ச்சிகளின் பாதுகாப்புத் தரங்களை இந்த நள்ளிரவு விபத்து மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

Recommended For You

About the Author: admin