கமல் – மணிரத்னம் படத்தில் இணைந்த குஷ்புவின் மகள்…

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள கமலின் 234 ஆவது படத்தில் குஷ்புவின் மகள் அனந்திதா இணைந்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 234 வது திரைப்படத்திற்காக இயக்குனர் மணிரத்னத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே 1987 ஆம் ஆண்டு நாயகன் திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும், அதற்கு பிறகு இவர்கள் இருவரும் இணையாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 35 ஆண்டுகள் கழித்து தற்போது கமல் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து இருக்கின்றனர். நடிகர் கமலஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தை நடித்து முடித்து இருக்கிறார். அதற்கு பிறகு 233 வது படத்திற்காக எச். வினோத்துடன் கூட்டணி அமைத்தார் அதேசமயம் 234 ஆவது திரைப்படத்தையும் மணிரத்னம் இயக்கத்தில் தொடங்குகிறார்.

இதற்கான பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது அதற்கான வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். அதில் பட குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.  இந்த திரைப்படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  இவர்கள் அனைவரும் படத்தின் பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்.  மேலும் கமல்ஹாசன் பிறந்தநாளன்று இந்த திரைப்படத்திற்கான ப்ரோமோ வீடியோவையும் பட குழுவினர் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.

இந்த படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல், மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் இணைந்து ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதாவும் இணைந்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். படத்தில் மணி ரத்னமின் உதவி இயக்குனராக அனந்திதா பணியாற்றுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது

Recommended For You

About the Author: admin