இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா, கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமான்டர் அமித் நாக்பால், கமான்டர் புர்னேந்து திவாரி, கமான்டர் சுகுநகர் பகாலா, கமான்டர் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரர் ராகேஷ் ஆகியோர் கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
இந்த நிறுவனம் கத்தார் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் அது தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனம், ஓமன் நாட்டின், ராயல் ஓமானி விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு சொந்தமானது. இந்த நிலையில் இந்நிறுவனத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 8 பேரும் கத்தார் நாட்டின் அதிநவீன நீர் மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தண்னீருக்குள் சென்றுவிட்டால் எதிரி நாட்டினரால் கண்டுபிடிக்க முடியாதது போல் நவீன முறையில் அந்த நீர்மூழ்கி கப்பல் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்பம்சம் கொண்ட அந்த நீர்மூழ்கி கப்பல் குறித்து இந்தியர்கள் 8 பேரும் உளவு பார்த்து இஸ்ரேல் நாட்டுக்கு கூறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர்களையும், அந்நிறுவனத்தின் உரிமையாளரையும் கத்தார் நாட்டு உளவுத்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தது. தொடர்ந்து அந்நிறுவன உரிமையாளர் கடந்த காண்டு நவம்பரிலேயே விடுவிக்கப்பட்டுவிட்டார்.
ஆனால் இந்தியர்களின் ஜாமின் மனுவை மட்டும் பல முறை தள்ளுபடி செய்த கத்தார் அதிகாரிகள், அவர்களது காவலையும் தொடர்ந்து நீட்டித்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டனர். இதையறிந்த இந்திய அரசு சட்ட உதவிகள் செய்து இந்தியர்கள் 8 பேரையும் தாயம் அழைத்துவரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. இந்த சூழலில், இவ்வழக்கில் இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பைத்துள்ளது கத்தார் நீதிமன்றம்.
கத்தாரில் சிறை வைக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், “விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். அந்த 8 பேரின் குடும்பத்தினருடனும் சட்டக் குழுவினருடனும் தொடர்பில் இருக்கிறோம். இந்த வழக்கில் அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் வழங்குவோம். அது போல் தூதரக உதவிகளும் அவர்களுக்கு கிடைக்கும். இந்த தீர்ப்பு குறித்து கத்தார் நாட்டு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துவோம்” என தெரிவித்துள்ளது.