ஊடகவியலாளர் நிமலராஜனின் 23-ம் ஆண்டு நினைவேந்தல் இன்று

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (19-10-2023) நடைபெற்றது.

யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை ஊடக அமையத்தின் செயலாளர் க. நிதர்ஷன் ஏற்றி வைக்க, உருவப் படத்திற்கு மலர் மாலையை மூத்த ஊடகவியலாளர் ம. நியூட்டன் அணிவித்தார்.

தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

போர்ச் சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப் பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சியின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றியிருந்தார்.

 

இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.

கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் , வீட்டின் மீது கைக் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர்.

 

இதன் போது வீட்டில் இருந்த நிமலராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: S.R.KARAN