எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு

எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: முன்னாள் அரச உளவுச் சேவைப் பிரதானி சுரேஷ் சலே நீதிமன்றத்தில் ஆஜர்!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, அரச உளவுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, இன்று (16) கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேயை, அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி நயனா செனவிரத்ன தலைமையில், நீதிபதிகளான நளின் ஹேவாவசம் மற்றும் லக்மாலி ஹேவாவசம் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கின் நான்காவது சாட்சியான சுரேஷ் குமார சுமதிபால நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில், கிரித்தலே, ஹபரணை மற்றும் கொட்டாவை ஆகிய பகுதிகளில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை இரகசியமாகத் தடுத்து வைக்கும் நோக்கில் கடத்துவதற்கு, அடையாளம் தெரியாத குழுவினருடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், சட்டமா அதிபரால் தண்டனைச் சட்டக்கோவையின் பிரகாரம் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி காணாமல் போனார்.

அவரது காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு, இலங்கையில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான முக்கியமான வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Recommended For You

About the Author: admin