பொருளாதார சுமையால் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்

அ.டீனுஜான்சி

“எமது அன்றாட வாழ்வு சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டது எப்போதும் ஏதோ ஒரு விதத்தில் கடினமான சூழ்நிலைகளை சந்திக்கின்றோம். கல்வி, வேலை வாய்ப்பு ,சமூக அந்தஸ்து போக்குவரத்து, மருத்துவவசதி ,என சகல பக்கங்களிலும் எமக்குரிய சவால்கள் குறையவில்லை” என்கிறார்.

கண்டியை நிசா தனது இடது கால் செயலிழந்து இருந்தாலும் ஊன்றுகோலின் உதவியுடன் தன் தேவைகளுக்காக பயணிக்கிறார்.”எனது இடதுகால் பிறந்ததிலிருந்தே உணர்வற்றிருக்கிறது ஆனால் மனதளவிலும் உடலளவிலும் எனக்கான வலிமையை நானாக உருவாக்கியிருக்கிறேன் எனக்கான தேவைகளை நானே பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம் நான் கடையொன்றை வாடகைக்கு பெற்று கடிகார திருத்தங்களைச் செய்கிறேன்” என்றவர் ஒரு மாற்றுத்திறனாளியாக விற்பனை நிலையத்திற்கும் வீட்டுக்குமான போக்குவரத்து சவால்கள் பற்றி பேசினார்

“சாதாரணமானவர்களை காட்டிலும் எங்களுக்கான செலவுகள் அதிகமானது போக்குவரத்து, மருத்துவம், பாவனை உபகரணங்கள் , என எங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் பட்டியல் நீளமானது. தற்போதைய விலை உயர்வு சமாளிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது” என்றார். “நான் என்னுடைய வியாபார நிலையத்திற்கு செல்வதற்கு தினமும் 12 கிலோமீட்டர் பயணிக்கிறேன் இதற்காக மட்டும் மாதம் 15,000.00 செலவாகிறது அவ்வப்போது வீட்டு பொருட்களை வாங்குவதற்கும் மருத்துவமனைக்கும் செல்கிறேன் வெளியில் செல்வது என்றால் நிச்சயமாக வாடகைக்கு முச்சக்கர வண்டி ஒன்றை பெற வேண்டியுள்ளது எனக்கு இதற்காக ஒவ்வொரு மாதமும் பெருந்தொகை பணம் செலவாகிறது .இது கட்டாயமான செலவாக இருக்கிறது” என்றவர் பொது போக்குவரத்து பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் நடத்தப்படும் விதம் குறித்து பேசி இருந்தார்

“நானும் என்னை போன்றவர்களும் பொதுபோக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறோம். அரச மற்றும் தனியார் பேரூந்துகளில் விசேடதேவைக்குரியவர்களுக்கு என ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது .ஆனால் பெரும்பாலான பேரூந்துகள் எங்களை அடையாளம் கண்டபின் ஏற்றிச்செல்வதில்லை.நான் புகையிரதங்களில் பயணித்ததில்லை ,அங்கே என் போன்றவர்கள் பயணிப்பதற்குரிய விசேட பாதைகள் மற்றும் வசதிகள் செய்யப்படவில்லை சாதாரண பயணிகளுடன் சென்று எம்மால் புகைரதத்தில் ஏற முடியாது வெளிமாவட்டங்களுக்கு செல்வதென்றால் பெரும் சிரமமானது வாடகை வாகனங்களை பார்க்கமுடியுமா? அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்குளவுக்கு எம்மிடம் சக்தியில்லை.

 

மாற்றுத்திறனாளிகளுக்கும் குடும்பம் இருக்கிறது , பொறுப்பு இருக்கிறது எனவே போக்குவரத்துச் சவாலிலிருந்துச் மீட்சி பெறுவதற்குரிய திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்” என்றார். கண்டி மாவட்ட சமூகசேவை திணைக்களத்தின் தகவல்களின் படி 9294 பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். அவர்களில் பார்வையற்றோர் 724 பேர் , செவித்திறனற்றோர் 741 , கற்றல் குறைபாடுள்ளோர் 1453 பேர்,இவர்களில் 3007 பேர் ,அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000.00 உதவித்தொகையை பெறுகின்றனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி சூழல் நாட்டின் அனைத்து பிரஜைகள் மீதும் கடுமையான அழுத்தை ஏற்படுத்தியுள்ளது .வருமானத்துக்கு மீறியதாக திணிக்கப்பட்டுள்ள செலவுகளால் அவர்களின் அன்றாட வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்வதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் ஏற்கனவே வெவ்வேறு நெருக்கடிகளுடன் வாழும் மாற்றுத்தினாளிகளுக்கு இந்தநிலை அதிக பாதிப்புகளை கொடுத்திருக்கிறது சாதாரண மக்களின் செலவுகளோடு ஒப்பிடும் போது இவர்களின் செலவுகள் அதிகமாகும்.

உடல் ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்பவர்கள் தங்களுக்கு தேவையான உபகரணங்களையும் மருந்துகளையும் அதிக விலை கொடுத்துக் கொள்வனவு செய்ய வேண்டி உள்ளது.

சக்கர நாற்காலி , ஊன்றுகோல், கிருமி நீக்கிகள் ,பம்பர்ஸ் என ஒவ்வொன்றும் மும்மடங்கு விலையேற்றத்துடன் காணப்படுகிறது. கூடுதலாக சக்கர நாற்காலிகளில் மற்றும் படுக்கை நிலையில் உள்ளவர்கள் அடிக்கடி தோல் சார்ந்த நோய்களுக்கு ஆளாகின்றனர் .

எப்போதும் தங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. கிருமி நீக்கிகள் மற்றும் பம்பர்ஸ் போன்றவற்றின் விலை உயர்வு இவர்களுக்கு பெரும் சுகாதார சவாலை ஏற்படுத்தியுள்ளது அத்துடன் உணவுப் பொருட்களின் அதிகரிப்பால் புரதச்சத்துள்ள உணவுகளை உள்ளெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின் படி உலக சனத்தொகையில் 16 வீதமானோர் குறிப்பிடத்தக்க இயலாமையுடன் வாழ்கின்றனர்.இவர்கள் பல்வேறு சுகாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கின்றனர்.

களங்கம், பாகுபாடு, வறுமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படுகின்றனர். மேலும் சாதாரண நபர்களைக் காட்டிலும் 20 வருடங்களுக்கு முன்பே இறப்பை எதிர்கொள்கின்றனர் பெரும்பாலும் ஆஸ்துமா, வாய்சுகாதாரமின்மையால் ஏற்றப்படும் நோய்கள், உடற்பருமன், நீரிழிவு, மன அழுத்தம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

80 வீதமான ஊனமுற்றோர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் வாழ்கின்றனர்.2012 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தால் மேற்க்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி இலங்கையின் சனத்தொகையில் 8.7 வீதமானோர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

கொழும்பு வாழைத்தோட்ட பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா ஜயவர்த்தன இவருடைய இளைய மகன் கசூன் வயது 14 உடல்வளர்ச்சி குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையில் உள்ளார்.தன் மகனின் நிலை குறித்து இவ்வாறு கூறுகிறார் . “ எனது மகனை 14 வருடங்களாக பராமரிக்கிறேன் என் கணவருக்கு நிரந்தரமான தொழில் எப்போதும் இருந்ததில்லை நாங்கள் கடைகளுக்கு வடை செய்து விற்கிறோம்.

இந்த வருமானத்தில் குடும்பத்தில் நான்கு பேர் வாழ்கிறோம். என் பெரியமகன் பாடசாலைக்கு செல்கிறார் இளையமகன் இயலாமல் இருக்கிறார் . அவருக்கான செலவுகளுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு தொகை பணம் தேவைப்படுகிறது ஒவ்வொரு நாளும் மூன்று பம்பர்ஸ் மாற்ற வேண்டி இருக்கிறது இந்த விலை உயர்வுக்கு முன்னர் ஓரளவு சமாளிக்கக்கூடிய பணப்பெறுமதியுடன் கிடைத்தது.

அப்போது மூவாயிரம் ரூபாய் போதுமானதாக இருந்தது இப்போது அந்த நிலைமை இல்லை ஒவ்வொரு மாதமும் 11,000 தேவைப்படுகிறது அரசாங்கத்தால் மகனுக்கு ஐயாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது ஆனால் இந்த தொகை எமக்கு போதுமானதாக இல்லை எங்களுக்கு நிரந்தரமான வருமானம் இன்மையால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் சில வேளைகளில் மகன் திடீரென சுகயீனமுற்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் இதற்காக முச்சக்கரவண்டியை அழைக்க வேண்டும், சாதாரணமாக 6500.00 இதற்கு செலவாகும் “என்றார்.

ரேணுகாவும் அவரது கணவரும் அன்றாட வாழ்வாதார தொழிலாக வடைகளை தயாரித்து விற்பனை செய்கிறார்கள் பருப்பை அரைக்க பயன்படும் மிக்ஸி செயலிழந்துள்ளதால் தங்களது தொழிலை சரியாக முன்னெடுக்க முடியவில்லை என்கின்றனர்.அதிக வசதிகள் அற்ற சிறிய வீடொன்றில் வசித்தாலும் தமது மகனை பராமரிப்பதை சிரமமாக நினைக்கவில்லை என்கின்றனர்.

மெலிந்த தோற்றத்துடன் முன்வராந்தையில் படுக்கவைக்கப்பட்டுள்ள மகனை கண்ணீருடன் பார்க்கிறார் ரேணுகா, தங்கள் மகனை புகைப்படமெடுப்பதை அவர் விரும்பவில்லை .

ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர் குடும்பத்திற்கு சுமையாக தான் இருப்பார் என்ற பொது எண்ணத்தை உடைத்து இருக்கிறார் நுவரெலியாவில் வசிக்கும் ஆனந்த், இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஏழு பேர் அடங்கிய குடும்பத்தை தனது உழைப்பினால் காப்பாற்றுகிறார் .

தனது சொந்த வாழ்வின் பொருளாதார, சமூக சவால்களை இவ்வாறு பகிர்ந்தார்.”பொருளாதார தன்னிறைவுக்காக உழைப்பது தனிமனித உரிமை ஆனால் மாற்றுத்திறனாளிகள் என வரும் போது அவர்களின் உழைப்பில் சந்தேகப்படுவது களையப்பட வேண்டும நான் 25 வருடங்களாக அச்சுத் தொழிலில் ஈடுபடுகின்றேன். ஆரம்பத்தில் என் தொழில் வழங்குனருக்கு என் மீது நம்பிக்கை ஏற்படவில்லை நான் வேலையை விட்டு சென்று விடுவேன் என்று நம்பினார் அதனால் ஏனையவர்களுக்கு பத்தாயிரமும் எனக்கு 5000 ரூபாவும் கொடுத்தார்கள் நான் தொழிலை நன்றாக கற்றுக்கொண்டேன்.

முடிந்தளவு மற்றவர்களை காட்டிலும் அதிகமாக வேலை செய்தேன் இதன் பின் நான் தொழிலுக்கு இணைந்த நிறுவனத்தில் எனக்கு சமமான சம்பளம் கிடைத்தது எனக்கான சலுகைகளும் கிடைத்தது ஏற்கனவே நான் எதிர்கொண்ட புறக்கணிப்புகளால் நான் சோர்வடையவில்லை மற்றவர்களை காட்டிலும் கூடுதலாக வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை செயலாக்கினேன்” என்றார் .

” நான் அண்மையில் நேர்காணல் ஒன்றிற்கு சென்றிருந்தேன் அங்கே இருந்த அதிகாரி ஒருவர் என் உடற்குறையை மட்டும் சுட்டிக்காட்டுவது போல் கேள்விகளை கேட்டார் உங்களால் அதிகம் நடக்க முடியுமா ?படிகளில் ஏற முடியுமா என சந்தேகத்துடன் கேட்டார். என்னால் முடியும் என நான் கூறினாலும் அவர் அதனை நம்ப தயாராக இருந்திருக்கவில்லை. உண்மையில் மாற்றுத்திறனாளிகள் தொழில் செய்யக்கூடியவர்கள். அவர்களின் ஆர்வத்தை புரிந்து ஏற்ற தொழிலை வழங்க முன்வர வேண்டும்.

தொழில் வாய்ப்புகள் இருந்தால் குறைந்தது தங்கள் அன்றாட தேவைகளுக்கான பணத்தையாவது பெற முடியும். இல்லையேல் எப்போதும் நிவாரணத்தை நம்பியே வாழ்வை கொண்டு செல்ல வேண்டிவரும் என்றார்”2022 ஆம் ஆண்டிற்கான உலகவங்கியின் அறிக்கையின் படி நுவரெலியா மாவட்டம் குறைந்த வருமானம் உள்ள மாவட்டங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டிருந்தது .

மாவட்ட சமூக சேவைத்திணைக்களத்தின் தரவுகளின் படி 3618 பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.இவர்களில் 1014 பேர் 5000.00 கொடுப்பனவைப் பெறுகின்றனர்.

சஞ்சுலாதேவி வயது 78 கொழும்பு வாழைசேனையில் வசிக்கிறார் தனது 42 வயது மகனை தனியொருவராக பராமரிக்கிறார்.அவரது மகன் பிறந்ததிலிருந்து சிறுமூளை வளர்ச்சியின்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரால் கட்டிலில் மட்டுமே ஒரளவிற்கு நிமிர்ந்து இருக்க முடிகிறது.

“என் மகனுக்கு இப்போது 42 வயதாகிறது அவன் பிறந்ததிலிருந்து இந்த கட்டிலில் தான் வாழ்கிறான். எனது கணவர் இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார் இப்போது நான் மட்டுமே இவனை பராமரிக்கிறேன்.தூக்குவது,குளிக்கவைப்பது,உடைகளைக் கழுவுவது என என் வயதை மீறி வேலைகளைச் செய்கிறேன்.

ஒரு வேளை பொருளாதார வசதி அதிகமிருந்தால் யாராவது பராமரிப்பாளர்களை நியமித்திருக்கலாம் நாங்கள் வருமானம் இன்மையால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் எமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதே கடினமாக இருக்கிறது எனது மகள் தான் எங்கள் செலவுகளை கவனிக்கிறார்.

எனக்கு எந்த வருமானம் எதுவும் இல்லை அரசாங்க உதவிகள் தொடர்பாக எனக்கு தெரியாது இனிமேல் தான் விண்ணப்பிக்க போகிறேன் . மகன் இவ்வாறு இருப்பதால் நான் வெளியில் எங்கும் செல்வதில்லை பெரிதாக யாருடனும் பேசுவதற்கு நேரம் கிடைப்பதில்லை நான் என் வாழ்வில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறேன் எனக்கு பின் என் மகனை யார் கவனிப்பார்கள் என்ற எண்ணம் அதிகமாக வருகிறது இதனால் இரவில் தூக்கமில்லை தனியார் காப்பகங்களில் சேர்ப்பதற்கு இலட்சக்கணக்கில் பணம் தேவை மற்ற இடங்களில் சேர்த்தால் நன்றாக பராமரிப்பார்களா என்று தெரியவில்லை” என்கிறார்.

கொழும்பு மாவட்டத்தில் 6831 பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.இவர்களில் 3160 பேர் 5000.00 கொடுப்பனவைப் பெறுகின்றனர்.காத்திருப்பு பட்டியலில் 1621 பேர் உள்ளனர். மாற்றுவலுவுள்ளோருக்கான சமூக , பொருளாதார நிரந்தர திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறதா?

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகம் இலங்கையில் ஊனமுற்றோரின் உரிமைகளை மேம்படுத்தும் நோக்கோடும் அந்த சமூகத்தின் வழிகாட்டலுக்குமான முக்கிய மையமாக செயல்படுகிறது இதன் ஊடாக பல்வேறு நலன் சார்ந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. குறைந்த வருமானத்தினை பெறும் விசேடதேவைக்குட்ப்பட்ட நபர்களுக்கு உதவி வழங்கும் பொருட்டு 2007 ஆம் ஆண்டிலிருந்து உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இனங்காாணப்பட்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகிறது தற்போது 72,000 நபர்கள் இந்த உதவித்தொகையைப் பெறுகின்றனர். இந்தத் தொகையை பெறும் ஒருவர் மாற்றுத்திறனாளி என்பதற்கு அரசமரத்துவரின் பரிந்துரை அவசியமானது அத்துடன் குடும்பத்தின் மாதாந்த வருமானம் 6000 ரூபாய் விட குறைவானதாக இருக்க வேண்டும் .கொழும்பு மாவட்ட சமூக சேவை திணைக்களத்தின் புள்ளிவிரபரங்களின் படி கொழும்பு மாவட்டத்தில் 3160 பேர் 5000.௦௦ ரூபாய் கொடுப்பனவை பெறுகின்றனர் 1621 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார, சமூக நெருக்கடிகளுக்கான தீர்வு நிரந்தரமானதாக அமைய வேண்டும் என்கிறார் மாற்றுவலுவுள்ளோர் அமைப்புகளின் ஒன்றிணைந்த முன்னணியின் செயலாளர் ராசாஞ்சின பத்திரன.இலங்கையின் முன்னெடுக்கப்படும் அரசியல் மறுசீரமைப்பு முயற்சிகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.

மேலும் அதனை உறுதி செய்யும் வகையில் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும் . மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பதற்கான சட்டம் 1996 ஆம் ஆண்டு இலங்கையில் கொண்டுவரப்பட்டது 2013ஆம் ஆண்டு மாற்றுவலுவுள்ளோருக்கான தேசிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது அமைச்சுகளில் பல பொறிமுறைகள் மற்றும் நிறுவனங்கள் நிறுவப்பட்டது இருப்பினும் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பிரச்சனைகளை முகம் கொடுக்கிறார்கள்.

நாட்டில் 1.6 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் வாழ்கிறார்கள் அவர்களில் 57 விதமானவர்கள் பெண்கள் அத்துடன் 71 வீதமானவர்கள் வாழ்வாதார தொழிலில் ஈடுபட முடியாத நிலைக்கு உட்பட்டுள்ளனர் ,இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்குரிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முறையை உருவாக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய ஆணைக்குழுவினை அமைப்பதே அவசியமானது
அதன்படி ஒவ்வொரு அமைச்சிலும் ஊனமுற்றோருக்கான மையம் ஒன்றை அமைக்க வேண்டும் பாராளுமன்றத்தில் 21 வது திருத்தத்தில் ஊனமுற்றோருக்கான சுயாதீனமான தேசிய ஆணை குழு ஒன்றை அமைக்க முன்மொழிவு கொண்டுவரப்பட வேண்டும் குறித்த ஆணை குழுவின் கட்டமைப்பில் அனைவரும் மாற்றுத்திறனாளிகளாக அமைதல் அவசியம் என்றார்.

வலுவூட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள்
இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்த சட்டத்தரணி சுப்பிரமணியம் ” இயலாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பழமையான சட்டமாக 1996 இல 28 மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளது.

இதில் முக்கியமாக 3 விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது மாற்றுத்திறனாளிகளின் கல்வி,தொழில் ,பொது சூழலை அணுகும் உரிமைகள் என்பன குறிப்பிடப்பட்டிருக்கின்றன.இதுவே இன்றுவரை நடைமுறையில் உள்ள ஒரே சட்டமாகும். இயலாமையால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு உரிமை மறுப்புகளுக்கு உள்ளாகி வரும் நிலையில் இந்த மூன்று விடயங்ளை மட்டும் கூறுவது அதன் பலத்தை குறைக்கிறது.

2016 இல் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகள் தொடர்பான வர்த்தகமானி வெளியிடப்பட்டது.இதில் அதிகமாக பொதுக்கட்டடங்களை பாதிக்கப்பட்டோருக்கு ஏற்றவாறு எவ்வாறு வடிவமைப்பது என்பது பற்றியே அதிகம் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

முக்கியமாக பேசப்பட வேண்டிய உரிமைகள் இங்கும் தவறவிடப்பட்டுள்ளமை இதன் முக்கியத்துவத்தை குறைத்திருக்கிறது. .2003 இல் இயலாமை உள்ளவர்களுக்கான தேசிய கொள்கை வெளியிடப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதில் இயலாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய போக்குவரத்து வசதிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் இயலாமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தேசிய செயற்ப்பாட்டு திட்டம் முன் வைக்கப்பட்டது.

எனினும் அமைச்சுகளால் உரிய நிதி ஒதுக்கப்படாமையால் இந்த திட்டம் தோல்வியடைந்தது என்றார் மேலும் குறிப்பிடுகையில் 2013-2017 வரையான காலப்பகுதியில் மாற்று வலுவுள்ளோருக்கான தேசிய செயற்ப்பாட்டு திட்டங்கள் முன்வைக்கப்பட்டது.இதற்குரிய வரைபு உதவி மற்றும் ஆலோசனை உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்பட்டது என்றார்.

இலங்கைஇலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு என உருவாக்கப்பட்ட சட்டங்களும் பரிந்துரைகளும் இதுவரை அவசியமான அனைத்து உள்ளடக்கங்களையும் கொண்டிருக்கவில்லை இது பெரும் குறைபாடாகவே பார்க்கப்படுகிறது அதனடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள 1996 ஆம் ஆண்டின் 28-ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தை திருத்தி அமைத்து புதிய உள்ளடக்கங்களுடன் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அபிவிருத்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சமுக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நிரந்தர தீர்விற்க்குட்பட வேண்டுமானால் , கடந்த பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.எவ்வாறாயினும் அவர்களுக்குரிய நிரந்தர தீர்வாக அமையப்போவது அவர்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதும் நடைமுறைப்படுத்துவதும் ஆகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை தேடுவதற்கான உரிமை மதிக்கப்பட வேண்டும் . அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்குரிய மற்றும் அவர்களுக்கு பொருத்தமான பணிகளையும் பயிற்ச்சிகளையும் வழங்க முன்வர வேண்டும் .

 

Recommended For You

About the Author: S.R.KARAN