மல்லிகா செல்வரத்தினம்
இன்றைய உலகம் எதிர்நோக்கும் பாரதூரமான சூழல்சார் பிரச்சினைகளில் ஒன்றாக நெழிகிப் பொருட்களின் பாவனை காணப்படுகின்றது. இந்நெகிழிப் பொருட்கள் சுற்றுப்புறச் சூழலுக்கும் உயிர்ப்பல்வகைமைக்கும் பெரும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் அமைந்துள்ளன.
நெகிழிப் பொருட்களின்
உருவாக்கம்….
2ம் உலக மகாயுத்த காலத்தில் போர்க்கருவிகளைச் செய்வதற்கு இந்த நெகிழி முதன் முதலில் உருவாக்கப்பட்டது. தற்போது அணிகலன்கள், கொள்கலன்கள், வாகன உதிரிப்பாகங்கள், பொதியிடும் பைகள், குடிபானப் போத்தல்கள், எழுது கருவிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் இன்னோரன்ன பொருட்கள் என எண்ணற்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நெகிழிப் பொருட்கள் பாவிப்பதற்கு இலகுவாக இருப்பதாலும், பாரமற்றுக் காணப்படுவதாலும், மலிவான விலையில் கிடைப்பதாலும் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது.
உலகளவில் வருடந்தோறும் 80 மில்லியன் தொன் அளவுக்கும் அதிமான பொலித்தீன் உற்பத்தி செய்யப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. “பொலி எதிலீன்” எனப்படும் இரசாயனப் பதார்த்தம் மூலமாகவே பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் என்பன உருவாக்கப்படுகின்றன. இதனால்தான் பொலித்தீன் பை என்று அழைக்கப்படுகின்றது.
இன்றைய மனிதர்களின் நாளாந்த வாழ்வில் நெகிழிப் பொருட்களின் பாவனையானது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மனிதர்களால் பாவித்த பின்னர் தூக்கி வீசப்படும் இந்த நெகிழிப் பொருட்களால் மண் மலடாகின்றது, நீர் மாசுபடுகின்றது, அபாயகரமான நோய்கள் ஏற்பட ஏதுவாகின்றது.
மண்ணை மலடாக்கும்
நெகிழிப் பொருட்கள்….
நெகிழிப் பொருட்கள் மண்ணில் வீசப்படுவதால், அவை உக்காமல் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும். இதிலும் குறிப்பாக, பொலித்தீன் பைகள் மண்ணில் சேர்வதால் பல்லாண்டுகள் உக்காமல் இருக்கும். உக்கலடையாமல் இருக்கும் இரசாயனப் பதார்த்தம் ஆதலால், இந்த நெகிழிப் பொருட்கள் மண்ணுக்குள் நீரை ஊடுபுகவிடாமல் தடுக்கின்றன. அத்தோடு, தாவரங்களின் வேரையும் மண்ணுக்குள் ஊடுபுக விடாமல் தடுக்கின்றன. இதனால் வரட்சி ஏற்படுகின்றது, விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறுகின்றன.
மேலும், இந்த நெகிழிப் பொருட்கள் உரியமுறையில் கழிவு முகாமைத்துவம் செய்யப்படாமல் வீசப்படுவதால் மண்ணில் காணப்படும் அரியவகை நுண்ணங்கிகள் அழிவடைகின்றன. விவசாயிகளுக்குத் தோழர்களாக இருக்கும் மண்புழுக்கள் மறைகின்றன. மண்ணைத் தூர்வையாக்கும் கம்பளப்பூச்சிகள் காணாமல் போகின்றன. மண் மலடானால், தாவரங்கள் வளராது. மழைவீழ்ச்சி குன்றும், விவசாயச் செய்கை பாதிப்புறும். விவசாயச் செய்கை பாதிப்புற்றால், உலகில் பஞ்சம் தலைவிரித்தாடும் என்பது யாவரும் அறிந்த உண்மை.
நீரை மாசுபடுத்தும்
நெகிழிப் பொருட்கள்…
மனிதர்களால் நீர்நிலைகளில் வீசப்படும் நெகிழிப் பொருட்கள், நாம் பயன்படுத்தக்கூடிய நன்னீரையும் மாசுபடுத்தக்கூடிய ஆபத்தான பொருட்களாகக் காணப்படுகின்றன. இந்நெகிழிப் பொருட்களால், நீர்நிலைகளில் வாழ்கின்ற உயிரிகள் சுவாசிக்க முடியாமல் உயிரிழந்துவருகின்றன.
மேலும், இந்நெகிழிப் பொருட்கள் வடிகால்களை அடைத்து நிற்பதால் நீர் வழிந்தோட முடியாமல் தேக்கமடைந்து நாற்றமடைகின்றது. இவ்வாறு நாற்றமடையும் சாக்கடை நீரால் சுவாச நோய்களும் தொற்று நோய்களும் ஏற்படுகின்றன. நுளம்புகள் பெருகி, நோய்களை உண்டாக்குகின்றன.
நீரானது மாசுக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாகக் கொண்டு செல்கின்றது. வருடந்தோறும் 63,56,000 தொன் கழிவு நீர், குப்பை மற்றும் சேறு ஆகியன உலகிலுள்ள பெருங்கடல்களில் கொட்டப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் நீர்நிலை மாசடைகின்றது. மாசடைந்த நீர்நிலை சூழற்தொகுதியைப் பெரிதும் பாதிக்கின்றது.
கால்நடைகளுக்கு எமனாகும்
நெகிழிப் பொருட்கள்…
இன்று அதிகளவான மனிதர்கள் உணவைப் பொதி செய்வதற்கு நெகிழித் தாள்களையே பயன்படுத்துகின்றனர். இவ்வாறு நெகிழித் தாள்களில் பொதி செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிட்ட பின்னர் இவர்கள் வீசும் நெகிழித் தாள்களைப் பசிக்கொடுமையில் உட்கொள்ளும் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நெகிழித் தாள்கள் கால்நடைகளின் இரைப்பைகளில் சிக்குவதால் சமிபாடு அடையாமல் அவை அநாவசியமாக உயிரிழக்கின்றன. இவ்வாறு உணவு பொதியிடும் நெகிழித் தாள்களைப் படித்தவர் பாமரர் என்ற பேதமில்லாமல் மனிதர்கள் வீசுவதால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன், கால்நடைகளுக்கும் எமனாகின்றன.
புற்றுநோய்க்கு வழிவகுக்கும்
நெகிழிப் பொருட்கள்….
இன்றைய உலகின் அபரிமித தொழினுட்ப வளர்ச்சியால் தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதில் மனுக்குலத்தைப் பெரிதும் அச்சுறுத்தும் தொற்றா நோயாகப் புற்றுநோய் காணப்படுகின்றது. குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என்று இந்நோய்த் தாக்கத்திற்கு உள்ளாவோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. இப்புற்றுநோய் உருவாக்கத்திற்கு நெகிழிப் பொருட்களின் பாவனையும் ஒரு காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நகரப்புறங்கள், கிராமப்புறங்கள் எங்கும் இந்த நெகிழிப் பொருட்களின் பாவனை அதிகரித்துக் காணப்படுகிறது. குளிக்கும் வாளியிலிருந்து குடிக்கும் குவளை வரை நெகிழிப் பொருட்களில் வடிவமைக்கப்பட்டு வீடுகளை ஆக்கிரமித்துள்ளன. அமரும் ஆசனங்கள், பயன்படுத்தும் மேசைகள், தண்ணீர் எடுக்கும் குடங்கள், தட்டு முட்டுச் சாமான்கள் என்று அனைத்துமே நெகிழிப் பொருட்களால் செய்யப்பட்டு வீடுகளில் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றுள் மீள்சுழற்சி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மிகவும் ஆபத்தானவை என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இன்று அநேகமானோர், மின்சாரம் தாக்காது என்ற காரணத்தினால் இந்நெகிழிப் பொருட்களில் வடிவமைக்கப்பட்ட குவளைகள் அல்லது பாத்திரங்களில் தண்ணீர் கொதிக்க வைத்துக் குடிக்கின்றனர், குளிக்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது என்று தெரிந்தும் பலர் இந்த முட்டாள்தனமான கைங்கரியத்தைச் செய்கின்றனர்.
அதேபோல கிராமப்புறங்களில் பொலித்தீன் பைகளில் பொருட்கள் வாங்கிவரும் பெண்கள், அப்பொலித்தீன் பைகளைப் பயன்படுத்தி அடுப்பு மூட்டுவதும் பரவலாகக் காணப்படுகின்றது. இச்செயலும் புற்றுநோய் மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான செயலாகும். அத்துடன், நெகிழிப் பொருட்களை வீட்டு வளாகம் மற்றும் வீதிகளில் தீயிட்டு எரிக்கும் செயற்பாடுகளும் கிராமப்புறங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதுவும் புற்றுநோய், சுவாச நோய் மற்றும் வளி மாசடைவதற்கு வழிவகுக்கின்றது.
நெகிழிப் பாவனையாளருக்கு
சட்ட நடவடிக்கை….
சுற்றுச் சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களைப் பாவித்த பின்னர் உரிய கழிவுத் தொட்டிகளில் இடாமல் நிலத்திலும் நீரிலும் வீசுகின்ற மனிதர்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையோ உள்ளூராட்சி அதிகாரசபைகளோ உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அதேபோன்று கிராமப்புறங்களில் நெகிழிப் பொருட்களைத் தீயிட்டு எரிப்போருக்கும் அவற்றைக் கால்வாய்களில் வீசி எறிவோருக்கும் உள்ளூராட்சி அதிகாரசபைகள் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அத்தோடு, உணவுக்காகக் குப்பைமேடுகளை நாடும் கால்நடைகளின் நலன் கருதி வன ஜீவராசிகள் திணைக்களமும் இந்த விடயத்தில் கரிசனை செலுத்த வேண்டும்.
நெகிழிப் பொருட்களை
ஒழிக்கும் வழிமுறைகள்…
சுற்றுச் சூழலுக்கும் மனிதர்களுக்கும் பெரிதும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் விளங்கும் நெகிழிப் பொருட்களின் பாவனையால் ஏற்படும் தீங்குகள் குறித்து மக்களுக்கு விழிப்பூட்டல் வேண்டும். இவ்வாறான விழிப்பூட்டல்களை ஊடகங்கள் அதிகம் செய்தல் வேண்டும். அத்தோடு, இதுகுறித்துப் பாடசாலை மட்டங்களில் மாணவர்களுக்கு அதிகமதிகம் போதித்தல் வேண்டும். இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வூட்டும் ஆக்கங்களை எழுதுவதற்கு மாணவர்களைத் தூண்ட வேண்டும்.
மேலும், நாட்டு மக்களின் நலன்கருதி நெகிழிப் பொருட்களை உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்வதை அரசு நிறுத்த வேண்டும். நெகிழிப் பொருட்களுக்குப் பதில் சூழலுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத மாற்றுப்பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். இதற்காகச் சூழலியலாளர்களும் சமூக நலன்விரும்பிகளும் அதிகம் உழைக்க வேண்டும்.