
அருள்கார்க்கி
“நான் கணவரை பிரிந்து 9 வருடங்கள் ஆகின்றது. இக்காலப்பகுதியில் எனது குடும்பத்தைக் காப்பாற்ற சொல்லெணா துன்பங்களை அனுபவித்து வந்துள்ளேன். கொரோனா பரவல், அதே போல் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியால் நான் கடுமையான துன்பங்களைச் சந்தித்தேன்” என்று கூறுகின்றார் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை துணைவி பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஐங்கரன் தயாரஞ்சனி.
தயாரஞ்சனி பனை ஓலையைக் கொண்டு வீட்டுப்பாவனைப் பொருட்கள் செய்து விற்பனை செய்பவர். அத்துடன் அவருக்கு ஒரு சிறிய வயல்நிலமும் உண்டு. தையல் வேலை மற்றும் பனை பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்வதை கடந்த 15 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றார். இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவர்களின் பாடசாலைச் செலவீனங்களைச் சமாளிப்பதே தயாரஞ்சனிக்கு பாரிய சவாலாக உள்ளது.
மேலும் பாடசாலை செலவுகள், உணவு, காகிதாதிகள் என்பவற்றை கொள்வனவு செய்வதற்கும் இந்த குடும்பம் கடும் பிரயத்தனப்படுகிறது. பனை உற்பத்தியால் மாதம் 5000Æ® ரூபாய்கள் வரை மாத்திரமே உழைக்க முடியும் என்று அவர் கூறுகின்றார். ஓடர்கள் வந்தால் மட்டுமே இதனை நிச்சயப்படுத்தி செய்ய முடியும். இல்லாவிட்டால் அவற்றுக்கான சந்தை வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். மேலும் முன்னர் 20 ரூபாய்க்கு கொள்வனவு செய்த பனை குருத்து ஒன்று இன்று ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகின்றது என்று அவர் கூறுகின்றார். இந்த தொகைக்கு கொள்வனவுச் செய்து தமது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாது என்பது அவரின் ஆதங்கமாகும்.
மேலும் தயாரஞ்சனியின் தந்தையும் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரின் சகோதரரும் அவருடனேயே இருக்கின்றனர். அவர்களின் செலவுகளையும் இவரே ஈடுசெய்கின்றார். எனவே முழுகுடும்பத்தையும் தாங்கிப்பிடிக்கும் பொறுப்பு இப்பெண்மணிக்கு உள்ளது. இவரின் மூத்த மகள் பாடசாலை கல்வியைப் பூர்த்தி செய்துவிட்டு ஒரு செருப்பு தயாரிப்பு தொழிற்சாலையில் எழுதுவினைஞராக பணியாற்றுகின்றார். இவரைப் போன்ற அதிக அளவிலான பெண்தலைமை குடும்பங்கள் வடக்கில் அன்றாடம் தமது வாழ்வாதாரத்துக்கு பெரும் போராட்டங்களை சந்தித்து வருகின்றனர். தொழில்வாய்ப்பு குறைவால் கிடைத்த தொழிலில் போதிய வருமானம் இன்றி இந்த நெருக்கடி நிலையை சமாளித்து வருகின்றனர்.
அதேபோல் வட்டுக்கோட்டை, பிள்ளையாரடி, சங்கரத்தையைச் சேர்ந்த 47 வயதுடைய உமாகாந்தன் சரஸ்வதி கணவரைப் பிரிந்து கடந்த 7 வருடங்களாக வாழ்ந்து வருகின்றார். மூன்று பிள்ளைகளின் தாயாரான இவர் சிரட்டையைக் கொண்டு வீட்டுப்பாவனைப் பொருட்களை விற்பனைச் செய்து தனது ஜீவனோபாயத்தை நடாத்துபவராவார். இவரின் மூத்த பிள்ளை சாதாரண தரத்தில் கல்வி கற்கும் அதே வேளை ஏனைய இருவரும் தரம் 10 இலும், தரம் 07 இலும் கல்வி கற்கின்றனர். பாடசாலை செலவீனங்கள் கடுமையாக இந்தக் குடும்பத்தைப் பாதித்திருக்கின்றமை அவருடனான உரையாடலினூடாக அறிய முடிந்தது.
இக்குடும்பத்தின் மொத்த வருமானமே ரூ.15000 வரை தான் காணப்படுகின்றது. இதில் வீட்டு வாடகை உணவு தேவைகள், கல்விச்செலவுகள் என அனைத்தையும் திருமதி சரஸ்வதி சமாளிக்க வேண்டும். இவரால் உற்பத்திச் செய்யப்படும் சிரட்டை அகப்பை ஒன்று ரூ.60 இற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் அதற்கான உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளன. ஒரு கிலோ சிரட்டை ரூ.35 இற்கும் பிடி தயாரிக்கும் கம்புகள் ரூ.1800 இற்கும் கொள்வனவு செய்கின்றார். இவரின் உற்பத்திகளுக்கு போதிய சந்தை வாய்ப்பு இன்மையால் இவரின் பொருட்களை விற்பனை செய்வது கஸ்டமாக உள்ளதாக சரஸ்வதி கூறுகின்றார். முன்னர் ரூ.30 இற்கு விற்பனை செய்த அகப்பை ஒன்று ரூ.60 இற்கு விற்பனை செய்யப்பட்டாலும் போதிய வருமானத்தை உழைக்க முடியாமை இவரின் சவாலாகும்.
மேலும் அறக்கட்டளை அமைப்பு ஒன்று இவருக்கு கோழி வளர்ப்புக்கு உதவி செய்துள்ளது. அது ஒரு துணை வருமானமாக காணப்பட்டாலும் கோழி தீவனம் பராமரிப்பு செலவீனங்கள் என்பன அதிகரித்துள்ளதால் அத்தொழிலும் சிரமத்தின் மத்தியிலேயே காணப்படுகிறது என்கின்றார். இதற்கு மாதர் சங்கத்தால் சிறியளவான கடன் உதவிகளை வழங்குவதன் மூலம் தம்மால் ஓரளவு சமாளிக்க முடிகின்றது என்கின்றார். வடமாகாணத்தில் அனேகமான பெண் தலைமைக் குடும்பங்களுக்கு இவ்வாறு தொண்டு அமைப்புகளின் உதவிகள் கிடைத்தாலும் சடுதியாக அதிகரித்த பொருட்களின் விலையேற்றம் காரணமாக அவர்கள் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர்.
இதேபோல் 40 வயதுடைய தேவன்குமாரி கணவரை பிரிந்து தனது தாய் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகின்றார். அவர் சித்தங்கேணி பிரதேசத்தில் செருப்பு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து தனது வாழ்க்கையைக் கொண்டு நடாத்துபவராவார். இவரைப் போன்ற பலர் இங்கு பணிபுரிகின்றனர். ஒரு நாளைக்கு ரூ.500 நாட்சம்பளமாக பெறும் இவர்களால் முழு குடும்பத்தின் செலவுகளையும் சமாளிப்பது மிகுந்த கஸ்டமாக உள்ளது என்கின்றார். செருப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் ரப்பர் சீட் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையேற்றம், விற்பனை வீழ்ச்சி, சந்தை வாய்ப்பு போன்ற காரணிகளால் அத்தொழிற்துறையில் இவர்களுக்கு போதிய வருமானத்தை உழைக்க முடியாதுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் ரூ.150 இற்கு விற்பனை செய்யப்பட்ட இறப்பர் பாதணி ஒன்று இன்று ரூ.500 இற்கு விற்பனை செய்யப்படுகின்றது. எனினும் விற்பனையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறித்த தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் தெரிவிக்கின்றனர். இது அவர்களை பொருளாதார ரீதியாக நேரடியாகப் பாதித்துள்ளது.
அதேபோல் யாழ்ப்பாணம் பாசையூர் பிரதேசத்தில் கடற்றொழில் சார்ந்து தொழில் புரியும் அநேகமான குடும்பங்களில் பெண் தலைமைக் குடும்பங்கள் காணப்படுகின்றன. பாசையூரில் மட்டும் 87 கணவரை இழந்த பெண்களைத் தலைமையாக கொண்ட குடும்பங்கள் உள்ளதாக பாசையூர் கடற்றொழில் சங்கத்தின் தலைவர் பரந்தாமன் மதன் தெரிவிக்கின்றார். இது இப்பிரதேசத்தில் ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது.
முக்கியமாக அவர்களுக்கான நிரந்தர தொழில்வாய்ப்பு ஒன்று இல்லாத காரணத்தினால் அப்பெண்கள் நாளாந்த கூலித்தொழில்களுக்குச் செல்கின்றனர். யுத்தத்தினால் கணவரை இழந்த பெண்களும், கணவரை பிரிந்து தனியாக பிள்ளைகளுடன் வாழும் பெண்களும் இதில் அடங்குகின்றனர். இப்பெண்களுக்கு பாசையூர் கடற்றொழில் சங்கம் தனது சேவைகளில் இவ்வாறான பெண் தலைமை குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக மதன் கூறுகின்றார்.
“பொதுவாகவே பாசையூர் பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே அதிகம். அதிலும் பெண் தலைமைக் குடும்பங்களுக்கு நாம் எமது சேவைகளை வழங்கும் போது முன்னுரிமை வழங்குவோம். பெரும்பாலான பெண்கள் வீட்டு வேலைகளுக்காக நகரத்தின் பல இடங்களுக்கு செல்கின்றனர். அதேபோல சிறியளவான தற்காலிக தொழில்களுக்கும் செல்கின்றனர். அவர்களுக்கு சங்கத்தால் நன்கொடைகள் வழங்குகிறோம். சங்கம் முன்னெடுக்கும் பணிகளுக்கு அவ்வாறான பெண்களுக்கு கொடுப்பனவுகளுடன் வேலைகளை வழங்குகிறோம்.” என்று கூறுகின்றார்.
மேலும் அவர் கூறுகையில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல், கல்விக்கு உதவி செய்தல், உலர் உணவு வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வதாகவும் தேவாலயத்துடன் இணைந்து பாசையூர் பிரதேசத்தில் பெண் தலைமைக் குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், சைக்கிள்கள், உலர் உணவு போன்றவை வழங்கப்பட்டுள்ளதாக மதன் தெரிவிக்கின்றார். எனினும் அனைத்து காலப்பகுதியிலும் இது சாத்தியமற்றது என்பதும் பொருளாதார நெருக்கடியால் இவர்கள் மேலும் நெருக்கடிகளை எதிர்கொண்டதாகவும் மதன் தெரிவிக்கின்றார்.
மறுபுறம் நாடு எதிர்கொண்டுள்ள இப்பொருளாதார நெருக்கடியினால் பல தொழிற்துறைகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் படகு கட்டும் தொழில்துறையாகும். யாழ்ப்பாணம் பாசையூர் பிரதேசத்தில் படகு கட்டும் நிறுவனமான “அகஸ்மின்” இன் உரிமையாளர் அந்தோனிப்பிள்ளை தேவகுமார் அவர்களுடன் உரையாடும் போது இங்கு தொழில் புரியும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை அறியமுடிந்தது.
அவர் கூறியதாவது “எமது நிறுவனத்தில் முன்னர் 30 பெண்கள் வரை தொழில் புரிந்தனர். இன்று 08 பேர் கூட இல்லை. அவர்களில் 05 பேர் பெண் தலைமைக் குடும்பங்களாக அறியப்பட்டவர்களாவர். தொழில் வழங்குவதில் அவர்களுக்கு எமது நிறுவனத்தில் முன்னுரிமை வழங்குகிறோம். அத்தொழிலானது பாரிய முதலீட்டைக் கொண்டு நடாத்தப்படுவது. ஆனால் இலாபம் மிகவும் சிறியது. பொருளாதார நெருக்கடியினால் படகு கட்டும் மூலப்பொருளான பைபர் தட்டுகள் கடுமையாக விலை கூடின. இதனால் இப்பெண்கள் தமது தொழில்களை இழக்கும் நிலையும் தோன்றியுள்ளது. எனவே இத்தொழில் துறையை எதிர்காலத்தில் கைவிட வேண்டிய நிலைமை உருவாகலாம். நாமும் எதிர்காலத்தில் வேறு தொழில்களை முன்னெடுப்பதைப் பற்றி ஆராய்ந்து வருகின்றோம் என்று கூறினார்.
இவ்விடயங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் மகளீர் அபிவிருத்தி சங்கத்தின் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவச்சந்திரன் அவர்களை அணுகி வினவியபோது அவர் இவ்வாறு தனது கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டார். “நாம் எமது சங்கத்தினூடாக முன்னர் வடக்கு மற்றும் கிழக்கில் 8 மாவட்டங்களில் பணியாற்றினோம். ஆனால் தற்போது வட மாகாணத்தில் மூன்று மாவட்டங்களில் எமது சேவைகளை கொண்டு செல்கின்றோம். யுளயை குழரனெயவழைn அமைப்பின் ஊடாக எமக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன.
பெண் தலைமைக் குடும்பங்கள் தொடர்பாக நாம் பிரதானமாக பணியாற்றுகின்றோம். சமீபகால பொருளாதார நெருக்கடியால் வடக்கில் கணிசமான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானவை பெண் தலைமைக் குடும்பங்களாகும். இவர்கள் வாழ்வாதாரம், காணிப்பிரச்சினை, கல்வி, போசாக்கு போன்ற துறைகளில் பாரிய சிக்கல்களை இந்தக்காலத்தில் எதிர்நோக்குகின்றனர். எமது சங்கத்தின் மூன்று சட்டத்தரணிகளுடாக இவர்களுக்கான உதவிகளை நாம் வழங்குகின்றோம். பெண் தலைமைக் குடும்பங்களின் மாணவர்களுக்கு கற்றல் உதவிகள், புலமைப் பரிசில்கள் மற்றும் போசாக்கு குறைபாடு உள்ளவர்களுக்கான உதவிகள் என்பனவற்றை எமது சங்கம் வழங்குகின்றது” என்றார்.
மேலும் “பொருளாதார நெருக்கடியால் அதிகமான பெண்கள் வீட்டு வன்முறையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றுக்கெல்லாம் நிலைபேறான தீர்வுகளை நோக்கி நாம் நகர வேண்டிய தேவையுள்ளது. அந்தவகையில் வட மாகாண பெண்களுக்கு சிறுவர் பராமரிப்பு தொடர்பாக “ஊhடைன சுiபாவள ஊழரசளந” பாடநெறி ஒன்றை வழங்கி வருகின்றோம். மேலும் மகளிர் விவகார அமைச்சின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள “றுழஅநn ளை யுஉவழைn Pடயn” ஒன்றிலும் வடமாகாண பெண்களின் பிரச்சினைகளை உள்ளடக்கியுள்ளோம். மேலும் பல சர்வதேச மாநாடுகளிலும் பெண்களின் இவ்வாறான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக எமது அறிக்கைகளை முன்வைத்துள்ளோம்” என்று கூறினார்.
இவ்விடயங்களுக்குட்பட்டு வட மாகாண பெண் தலைமைக் குடும்பங்களுக்கான பொருளாதார நெருக்கடிகளை மையப்படுத்தி ஒரு தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. ஒட்டுமொத்த மாகாணம் தழுவிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதும் பிராந்திய ரீதியாக காணப்படும் வளங்களை பயன்படுத்தி அவர்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை ஸ்தீரப்படுத்த வேண்டிய தேவையும் காணப்படுகின்றது.
இதே நிலைமை கிழக்கு மாகாணத்திலும் பெண் தலைமை குடும்பங்களில் காணப்படுகின்றமை எமது விஜயத்தின் போது அவதானிக்கப்பட்டது. செங்கலடி, ஏறாவூர் பிரதேசங்களைச் சேர்ந்த பனையோலை உற்பத்திகளில் தங்கியிருக்கும் பெண் தலைமைக் குடும்பங்கள் இதே சவாலை பொருளாதார நெருக்கடியால் எதிர்கொள்கின்றனர். செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய விஜயநிலாவின் குடும்பமானது கடந்த 9 வருடங்களாக பனையோலை உற்பத்திகளால் தமது ஜீவனோபாயத்தை கொண்டு நடாத்துகின்றனர். பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து இவர்களின் மூலப்பொருள், சந்தைவாய்ப்பு என்பன கேள்விக்குறியாகியுள்ளன.
இவரைப் போலவே 58 வயதுடைய மீரா முகைதீன் ரஸமத்தும்மாவும் பாய், கூடை போன்ற பனை உற்பத்திகளால் தமது ஜீவனோபாயத்தை அமைத்துக்கொண்டவராவார். கணவரை பிரிந்த இவருக்கு வீட்டுவசதி, மகளின் கல்விச்செலவுகள், உணவு மற்றும் மருத்துவ செலவீனங்களை சமாளிப்பதற்கு அன்றாடம் மிகவும் சிரமப்படுகின்றார். பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு முன்னர் இவர்களின் வாழ்க்கை ஓரளவுக்கு சுமுகமாக இருந்ததாக அவர் கூறுகின்றார்.
ஏறாவூர் சிங்கள குடியேற்றத்தைச் சேர்ந்த பி.ஜி.ரன்தெனிய மற்றும் திருமதி இந்திகா சாமலி போன்றோரும் பனை உற்பத்தி பொருட்களைக் கொண்டு தமது அன்றாட வருமானத்தை அமைத்துக் கொண்டோராவார். இவர்களும் மூலப்பொருள் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றமையை எமக்கு அவதானிக்க முடிந்தது. மேலும் இவர்களது உற்பத்திகளுக்கான நிலையான சந்தை வாய்ப்பு இன்மையும் ஒரு பாரிய பிரச்சினையாகும்.
மேலும் ஏறாவூர் கலந்தர் வீதியைச் சேர்ந்த ஆயிஸா உம்மாவின் கணவர் கால்களை இழந்தவராவார். ஆயிஸா உம்மாவின் பனை ஓலை உற்பத்திகளை விற்பனை செய்வதன் மூலம் தான் அவர்களின் குடும்பம் தமது ஜீவனோபாயத்தை கொண்டு நடாத்துகின்றது. இவரைப் போன்றே 38 வயதுடைய நஸீரா சிறிய மரக்கறி கடை ஒன்றை நடாத்தி வருபவராவார். பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மரக்கறிகளின் விலையேற்றம், போக்குவரத்து செலவு என்பன சடுதியாக அதிகரித்ததன் காரணமாக இவர்களின் தொழிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
மேலும் 4 பேரைக் கொண்ட குடும்பத்தை 63 வயதுடைய பரிபாத்திமா இடியாப்பம் விற்று காப்பாற்றுகின்றமையும் எமக்கு அவதானிக்ககூடியதாக இருந்தது. இவர்களின் தொழில்துறை குடிசைக் கைத்தொழிலாக இருப்பினும் இவர்களை பொருளாதார ரீதியாக பாதுகாக்கக் கூடிய திட்டங்கள் எவையும் இல்லாமை ஒரு குறைபாடாக உணரப்பட்டது. கணவரை இழந்த பெண்களுக்கான விசேட திட்டங்களை பிரதேச சபைகளினூடாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றமையை இப்பிரதேசத்தைச் சேர்ந்த அனைவரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதே நிலைமை மாத்தறை மாவட்டத்திலும் ஒரே விதமாகவே காணப்படுகின்றது. மாத்தறை மாவட்ட பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான ராமசாமி ரஞ்சனி அவர்கள் கணவரை இழந்து வாழ்ந்து வருகின்றார். சாரதியான அவரின் கணவர் 2021 ஆம் ஆண்டு மரணித்ததைத் தொடர்ந்து தனது தாய் மற்றும் பிள்ளைகளின் பொறுப்பை தனித்து சுமக்க வேண்டியுள்ளது. உயர்தரம் கற்கும் மகளின் கல்வி செலவுகளுக்கு அவர் பாரிய தொகையை செலவிட வேண்டியுள்ளது. வயதான அவர் தாயும் நகரத்திலுள்ள வீடொன்றிலேயே பணியாற்றுகின்றார். ரஞ்சனிக்கும் நிரந்தர தொழில் ஒன்று இல்லை.
அருகிலுள்ள கிராமங்களுக்கு கூலி வேலைக்குச் சென்றுதான் குடும்பத்தைக் காப்பாற்றுகின்றார். அவ்வாறு சென்றால் ஒரு நாளைக்கு ரூ. 600 மட்டுமே கிடைப்பதாக ரஞ்சனி கூறுகின்றார். பிள்ளைகளின் கல்விச் செலவீனங்கள் அதிகரித்ததன் காரணமாக பாரிய நெருக்கடியை இக்குடும்பம் எதிர்கொண்டுள்ளது. அதேபோல் இவர்களின் ஊரில் எவ்வித சுயதொழில் முயற்சிகளுக்கான வசதிகள் இல்லாதிருப்பதும் ஒரு குறைபாடாகும்.
அதேபோல் காலி மாவட்டத்தின் தல்கஸ்வெல்ல தோட்டத்தில் தேயிலை பறிப்பவராக பணியாற்றும் சோமரத்த தமயந்தி மூன்று பிள்ளைகளின் தாயாவார். பூர்வீக காணி பிரச்சினையால் தனது கணவரைப் பிரிந்து வாழும் இவர் தனது மூன்று பிள்ளைகளுடனும் வாடகை வீடொன்றிலேயே கடந்த 15 வருடங்களாக வாழ்ந்து வருகின்றார். பொருளாதார நெருக்கடியால் கடன் சுமை அதிகரித்துள்ளதாக தமயந்தி கூறுகின்றார். பாடசாலைக்கான போக்குவரத்து செலவீனங்கள் அதிகரித்துள்ளதால் தமது பிள்ளைகள் இடைவிலகும் நிலைமை தோன்றியுள்ளதாக அவர் கூறுகின்றார். அமைப்பு ரீதியாக இவ்வாறான பெண் தலைமை குடும்பங்களை பாதுகாப்பதற்கான எவ்வித கட்டமைப்புகளும் இல்லாமை ஒரு பின்னடைவாகும்.
இதே பிரச்சினைகளை அன்றாடம் சந்திக்கும் களுத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள பெண் தலைமைக் குடும்பங்களையும் அணுகி நாம் அவர்களின் நிலைமைத் தொடர்பாக கேட்டறிந்தோம். இதன்போது லோகலெட்சுமி என்ற கணவரை இழந்த பெண்மணி தனது குடும்ப சுமையை தனியாளாக சுமக்கின்றார். நிரந்தர தொழிலற்ற அவர் அருகிலுள்ள பெரும்பான்மையின கிராமங்களுக்குச் சென்று கூலி வேலை செய்தே தனது வாழ்க்கையை கொண்டு நடாத்துகின்றார். மாதவருமானம் ஈட்டக்கூடிய தொழிலொன்று இல்லாமை இவர்களுக்கு ஒரு சவாலாகும்.
இறக்குவானை பிரதேசத்தை சேர்ந்த எஸ். புவனேஸ்வரியின் கணவரும் நிரந்தர தொழில் இல்லாத காரணத்தினால் கூலி வேலைகளுக்குச் செல்கின்றதாக கூறுகின்றார். கல்விச் செலவுகள் அதிகரித்திருப்பதே இவர்களின் பாரிய நெருக்கடியாக இருக்கின்றது. இவர்களைப் போலவே கூலி வேலை செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றும் எம்.ரேணுகாவும் தனது 5 பிள்ளைகளின் பொறுப்பை தனித்து சுமக்கும் தாயாவார். செலவுகள் அதிகமானதாக உள்ள காரணத்தினால் தமது பிள்ளைகள் கடந்த ஒரு வருட காலமாக பாடசாலை செல்லவில்லை என்று இவர் கூறியது எமக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இரத்தினபுரி ஹபுகஸ்தென்ன பிரதேசத்தில் காணப்படும் இவ்வாறான நிலைமைகள் தொடர்பாக சமூக செயற்பாட்டாளரான சிதம்பரம் நிரஞ்சன் அவர்கள் இவ்விடயங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது “இப்பிரதேசமானது அதிகமான வறிய குடும்பங்கள் வாழும் ஒரு தோட்டமாகும். இவர்களுக்கு இங்கு சுயதொழில் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. இதனால் அதிக போக்குவரத்து செலவுகளை செய்து இரத்தினபுரி, அவிசாவளை ஆகிய நகரங்களுக்கு அன்றாட தொழில்களுக்குச் செல்கின்றனர். எமது ஊரில் அரசாங்கம் சுயதொழில் திட்டங்களை முன்னெடுத்தால் இவ்வாறான குடும்பங்களுக்கு பாரிய உதவியாக இருக்கும்” என்று கூறினார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் உரிய முறையில் பெண்தலைமை குடும்பங்களைச் சென்றடையாமை, இவர்கள் பொருளாதார ரீதியாக உடனடியாக பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கின்றது என்ற கருத்தை முன்வைக்கின்றார் சுதந்திர தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சிரிநாத் பெரேரா அவர்கள். அவர் மேலும் கூறுவதாவது “எமது தொழிற்சங்கம் மூலம் தேசிய ரீதியாக இவ்வாறான பெண்தலைமை குடும்பங்களின் பிரச்சினைகளை அவதானம் செலுத்துகின்றோம். ஆனால் இவர்கள் தொடர்பான தரவுகள் அரச நிறுவனங்களில் இல்லை. இவர்கள் ஒரு தனியான பாதிக்கப்பட்ட சமூகக் குழுக்களாக அடையாளம் காணப்பட்டு இவர்களுக்கான தேவைகள் பூர்த்திச் செய்யப்பட வேண்டும். பல்கலைகழகங்கள் இவ்வாறான குடும்பங்கள் தொடர்பான தகவல்களை ஆய்வு செய்து தரவுப்படுத்த முடியும். நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் இவ்வாறான குடும்பங்கள் காணப்படுகின்றன. ஆனால் பிரதேசங்களுக்கு ஏற்ப பிரச்சினைகளின் தன்மை மாறுபடுகின்றது. இவ்வாறான குடும்பங்கள் போசணை குறைபாடு இளவயது திருமணங்கள், பாடசாலை இடைவிலகல், இளவயதில் தொழிலுக்குச் செல்லல் போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவை முறையாக அறிக்கையிடப்பட்டு தேசிய வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்” என்று சட்டத்தரணி சிரிநாத் பெரேரா கூறுகின்றார்.
அதேபோல் இது ஒரு தேசிய பிரச்சினையாக காணப்படுவதால் இதற்கான நிலைபேறான தீர்வுகள் தொடர்பாக பெண்ணியச் செயற்பாட்டாளரும் மனிதவுரிமை ஆர்வலருமான நளினி ரட்ணராஜா அவர்களை அணுகி வினவியபோது அவர் தனது கருத்துக்களை இவ்வாறு பகிர்ந்துக்கொண்டார். “நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லீம் சமூகத்தவர்கள் என அனைத்து இனங்களிலும் பெண் தலைமை குடும்பங்கள் காணப்படுகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் கைத்தொழில் உற்பத்திகளால் தமது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டவர்களாவார். இவர்களின் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பின்மை, தரகர்களின் ஆக்கிரமிப்பு போன்றவற்றால் இவர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது. அதிகரித்த விலைவாசிக்கு முகங்கொடுத்தல், பெண் பிள்ளைகளின் கல்வி, தனிப்பட்ட சுகாதாரம் தடைபடல், போன்ற பிரச்சினைகள் பெண் தலைமை குடும்பங்களில் காணப்படுகின்றன. வடகிழக்கிலாவது உட்கட்டமைப்பு வசதிகள் ஓரளவுக்கு இருந்தாலும் மலையகத்தில் அவ்வாறில்லை.
இன்று எமக்கான அன்னிய செலாவணியை பெண்களை ஈட்டித்தருகின்றனர். ஆனால் இவ்வாறான குடும்பங்களுக்கு அரசாங்கமோ, அரசியல் கட்சிகளோ நேரடியாக எதனையும் செய்யவில்லை. இருக்கும் வளங்களை முறையாக பயன்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் இல்லை. இதில் அரசுக்கே முழுப்பொறுப்பும் உள்ளது. பெண் தலைமை குடும்பங்களை மையப்படுத்திய புதிய கொள்கைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். மானியங்கள், கடனுதவிகள் என்பனவும் அவர்களை வலுப்பெற உதவும்.
அதேபோல் சிவில் சமூகம், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் துறை, போன்றோரின் கூட்டாண்மையுடன் இவர்களுக்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது பொருளாதார ரீதியாக இவர்களை மீண்டெழ உதவி செய்யும்” என்று கூறினார்.
இவற்றை தொகுத்து நோக்கும் போது பெண் தலைமைக் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு தேசிய பிரச்சினையாகும். எனவே தேசிய மற்றும் பிராந்திய மட்டத்தில் இவர்களுக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.
மேலும் தொழில்நுட்ப ரீதியாகவும் இவர்களை வலுவூட்டுவதும், புதிய தொழில் முயற்சியாண்மைகளுக்கு இவர்களை தயார்ப்படுத்துவதும் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு உகந்த ஏற்பாடுகளாகும். மேலும் இக்குடும்பங்களின் பிள்ளைகளுக்கான கல்வி, சுகாதாரம், போசாக்கு போன்றவற்றுக்கு உள்ளுராட்சி மன்றங்களினூடாக குறுகிய கால நலத்திட்டங்களை முன்னெடுக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.