காவு கொள்ளப்படும் காடும் கடலும்/ அழிவின் விளிம்பில் யாழ்ப்பாணம்!

S. R. கரன்
இலங்கையின் வடமாகாணத்திலுள்ள வன்னிக் காடுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. கிரவல் அகழ்வு – மண், மணல் அகழ்வுகளின் நீட்சியாகவும் காடுகள் அழிக்கப்படுகின்றன – அழிவடைகின்றன.
 வடக்கு மாகாணத்திலுள்ள காடுகள் மட்டுமன்றி நிலம், கடல், கனிய வளங்கள் என்பன திட்டமிட்ட வகையில் சுரண்டப்பட்டு வருகின்றன.
 வன்னிக் காடுகளுக்கு மட்டுமன்றி இயற்கை வளங்கள் அனைத்திற்கும் இருந்த பாதுகாப்பு அரண்கள் முற்றாக அகற்றப்பட்ட சூழ்நிலையே தற்போது நிலவுகின்றது.
 
இயற்கை வளங்கள் வகை தொகை இன்றி சுரண்டப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் பாதுகாப்பு அரண்கள் இல்லாமல் செய்யப்பட்டதே பிரதான காரணமாகும்.
 தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னிக்  காடுகளைப் பாதுகாத்தார்கள் – காடுகளை உருவாக்கி தம்மைப்  பலப்படுத்திக் கொண்டார்கள் என்று கூறுபவர்களும் உண்டு.
அதேவேளை, தமது வாழ்விடங்களை அழிப்பதற்கு யாரும் முயற்சிக்க  மாட்டார்கள். அவ்வாறு தான் விடுதலைப்புலிகளும் வன்னிக் காடுகளை தமது வாழ்விடமாக மாற்றிக் கொண்டதால் காடுகளைப் பாதுகாத்து தம்மையும் பாதுகாத்துக் கொண்டனர்.
 புலிகளை அழித்து விட்டோம் என்று மார்தட்டி கொள்பவர்கள் புலிகளின் வாழ்விடங்களையும் அழித்தொழிக்கும் கைங்கரியங்களில் இறங்கியுள்ளனர்.
இயற்கை வளங்களை அழிப்பது மனிதன் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். யாரோ ஒருவர் வருமானம் ஈட்டிக் கொள்வதற்காக எம்மைச் சூழ்ந்துள்ள  இயற்கை வளங்களை நாம் தாரை வார்த்துக்  கொடுத்து விட முடியாது.
 வன்னிக் காடுகள் தமிழர்களின் மிகப்பெரிய பலம். அதனைச்  சிதைத்து சிதலமடையச் செய்வதன் மூலம் தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்ய முடியும் என்பதை இன அழிப்பு குழுக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றன. அதற்கு எம்ம வர்களும் துணை போகின்றனர் என்பதே மிகப்பெரிய வேதனை.
 இவ்வாறான சூழ்நிலையில் இயற்கை வளங்களைப் பேணிப் பாதுகாப்பதில்  ஊடகங்களின் பங்களிப்பு –  ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாக நோக்கப்படுகின்றது.
 இதனைப் புரிந்து கொண்ட யாழ். ஊடக அமையம் “சுற்றுச்சூழல் அறிக்கையிடலும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பும்”  எனும் கருப்பொருளில் ரில்ஹோ விருந்தினர் விடுதியில் கடந்த 17.06.2023 – 18.06.2023 இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தியிருந்தது.
https://youtu.be/TqMlngLi_Ag
 காலத்தின் அத்தியாவசிய தேவையாகக் கருதப்படும் குறித்த கருத்தமர்வில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டன. இதன் அடிப்படையில் வன்னிக் காடுகள் அழிக்கப்படுவது மனித குலத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்பதை வெளிப்படுத்துவதோடு எஞ்சியுள்ள காடுகளையும் கனிய வளங்களையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மையப்படுத்தியே இந்தக் கட்டுரை வரையப்படுகின்றது.
வன்னிக் காடுகள்
 இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ளன வன்னிக் காடுகள். முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களின் பிரதான அடையாளமாகக் காணப்பட்ட இக்காடுகளை முகப்புத் தோற்றத்தில் மட்டுமே காணக்கூடியதாக இருக்கின்றது.
அதாவது ஏ -9  வீதியின் இரண்டு பக்கங்களிலும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் மட்டுமே காடுகளைக் காணலாம். உள்ளே சென்று பார்த்தால் வெறும் தரையை மட்டுமே விட்டு வைத்துள்ளனர்.
 குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு காலகட்டத்தில் மிகவும் அடர்த்தியாகவும் மழை வீழ்ச்சிக்கான தோற்றுவாயாகவும் காணப்பட்ட காடுகள் பல்வேறு தரப்பினராலும் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான உண்மைகளை உரிய ஆதாரங்களுடன் வெளி உலகிற்கு கொண்டு வந்த இரண்டு ஊடகவியலாளர்கள் மரக் கடத்தல் காரர்களால் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டனர்.
 இது ஒரு புறம் இருக்க வவுனியா மாவட்டத்தில் அபிவிருத்தியின் பெயராலும் மக்கள் பெருக்கம் – திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாலும் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
 இதேவேளை, தற்போது கரும்புச் செய்கை – சீனித் தொழிற்சாலை என்ற போர்வையில் 70 ஏக்கர் வனம் சார்ந்த காணிகளை கையகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 அடர்ந்த வனங்கள் அழிக்கப்பட்டு ஹோட்டல்களும் அடுக்கு மாடி கட்டடங்களும் உருவாக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் இயற்கை சமநிலை இழந்து தத்தளித்து வருகிறது.
சேத்துக் கடலாகும் யாழ். குடாக்கடல்
 வடக்கின் பெரும் வளமாக வன்னிக்  காடுகள் எவ்வாறு நோக்கப்படுகின்றனவோ அதேபோன்று கடல் வளமும் பிரதான பங்கு வகிக்கிறது.
 ஒருபுறம் வன்னிக் காடுகள் அழிப்பு மறுபுறம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி கடல் வளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு- அழிக்கப்பட்டு வருகின்றன.
 இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய  தொழில் நடவடிக்கைகளால் வடக்கு கடல் வளம் சூறையாடப்படும் அதேவேளை கடலட்டை பண்ணைகள் அமைக்கப்படுவதால் கடல் மாசடைதல் அதிகரித்து வருகின்றது.
 யாழ்ப்பாணம் பாசையூர் கடற்றொழிலாளர்கள் சங்கத்தில் 25.06.2023 அன்று நடைபெற்ற கலந்துரையாடலில் சமூகச்  செயற்பாட்டாளர் ம. செல்வின் அவர்கள் அதிர்ச்சியூட்டும் பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.
https://youtu.be/Xrn0I5u-Tf8
 அவற்றில் மிகவும் முக்கியமான விடயமாக இன்னும் 10 வருடங்களில் யாழ். குடாக்கடல் சேத்துக்கடலாக மாறும் ஆபத்து உருவாகியுள்ளது என்பதை சாதாரணமானதாக  எடுத்துக் கொள்ள முடியாது.
 வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் –  கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள ஆழம் குறைந்த கடற்கரைகளில் எந்த விதமான ஆய்வுகளும் திட்ட மிடல்களும் – முறைப்படுத்தல்களும் இன்றி அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளால் கடல்வாழ் உணவுச் சங்கிலியில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இது கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டுமல்ல ஒட்டுமொத்த உயிர்ப்  பல்வகைமையிலும் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பதை மனித குலம் புரிந்து கொள்ள வேண்டும்.
 கடலிலே இயற்கையாகத் தோன்றி இயற்கையாக வளர்ந்து கடல் மாசடைவதைத் தடுத்து வந்த அட்டைகளை பண்ணைகள் அமைத்து – அடைத்து வைத்து தீனி போட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியச்  செலாவணியை – டொலரை  ஈட்டுகின்றனர்.
 எமது கடல் வளத்தை அழித்து யாரோ ஒருவர் இருவர் டொலர் பெற்றுக் கொள்வதற்காக உணவிற்கும் பண்பாட்டிற்கும் பொருத்தமில்லாத அட்டைகளை வளர்ப்பது அடி முட்டாள்தனம்.
 யாழ். குடாக்கடல் ஏற்கனவே பல காரணங்களால் மாசடைந்து கிடக்கிறது. இந்நிலையில் சேத்துக்  கடலாக மாறினால் மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும்.
https://youtu.be/jEoiUTfOjLI
 காப்பெற் வீதிகள் அமைக்கப்பட்ட போதும் ரயில் பாதைகள் ( தண்டவாளங்கள் ) போடப்பட்ட போதும் நீரோட்டங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. இதுவும் கடல் மாசடையக் காரணம் என்று குறித்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.
 கடலட்டை பண்ணைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக குரல்கள் எழுந்த வண்ணமே உள்ளன. இருப்பினும் அதிகார வர்க்கத்தின் துணையுடன் கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதாலும் அமைக்கப்பட்டு வருவதாலும் எதிர்ப்பாளர்களின் குரல்கள் நசுக்கப்பட்டு வருகின்றன.
கடலட்டை பண்ணைகள் வேண்டாம் என்று எதிர்த்துப் போராடியதால் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர், உப தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் சட்டவிரோதமான முறையில் அகற்றப்பட்டு கூட்டுறவு உதவி ஆணையாளரால் புதிய தலைவர், உப தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியது.
https://youtu.be/UbYmwxAGDAs
https://youtu.be/RBTHIZKzAQY
 இப்போது கடலட்டை பண்ணைகள் வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவிக்கும் கடற்றொழிலாளர்களின் தொழில் உரிமை – கடல் மீது அவர்களுக்கு இருக்கும் உரிமை என்பனவும் பறிக்கப்படும் ஆபத்தும் உருவாகியுள்ளது.
 இத்தகைய நடவடிக்கைகள் கடற்றொழிலாளர்களை கடலிலிருந்து அந்நியப்படுத்தும் அநீதியான செயற்பாடாகும்.
 இது தொடர்பில் கடற்றொழிலாளர்கள் சார்ந்த சங்கங்கள் மட்டும் அக்கறை காட்ட வேண்டும் என்று ஏனைய தரப்பினர்  ஒதுங்கியிருக்க முடியாது.
சங்கங்களின் பங்களிப்பு
காடுகள் தானே அழிக்கப்படுகின்றன அது தொடர்பில் நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் என்று கடற் றொழிலாளர்கள் சார்ந்த சங்கங்கள்,  சமாசங்கள், சம்மேளனங்கள் அசண்டையீனமாக – அமைதியாக இருந்து விட முடியாது.
 கடல் வளம், வன வளம் அழிக்கப்படும்போது அல்லது சூறையாடப்படும்போது  விவசாய சங்கங்கள் – சம்மேளனங்கள், ஆசிரியர் சங்கங்கள், மாணவர் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தால் இயற்கை பேரிடர் காலங்களில் அதிக விலை கொடுக்க வேண்டி ஏற்படும்.
எனவே, சுற்றுச்சூழல் சார்ந்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். ஊரிலே ஒரு குளம் தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரிக்கப்பட்டால் வீட்டு கிணற்று நீர் மட்டம் எவ்வாறு உயர்கின்றதோ – நிலத்தடி நீரின்  உவர்த்தன்மை குறைந்து நீர்வளம் பெருகுகின்றதோ அதேபோன்று காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து மழை வீழ்ச்சியையும் கடல் மாசடைவதைத் தடுத்து உயிர்ப்  பல்வகைமையைப் பாதுகாப்பதோடு எமக்குத் தேவையான புரதச்சத்துள்ள கடல் உணவுகளை நியாயமான விலையில் பெற்றுக் கொள்வதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
https://youtu.be/oufLVpKyJGQ

Recommended For You

About the Author: S.R.KARAN