கத்தாரில் மின்சார ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மற்றும் அதற்கு ஒத்த வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டாயப் பதிவு மற்றும் நம்பர் பிளேட் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2026 நவம்பர் 18ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய போக்குவரத்து சட்ட இலக்கம் 19/2026 இன் கீழ், மின்சார ஸ்கூட்டர்கள் உரிய உரிமம் வழங்கும் அதிகாரியின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்திய பின்னரே பயன்படுத்தப்பட வேண்டும்.
சட்டத்தின் 16ஆவது பிரிவின்படி, பதிவு செய்யப்பட்ட ஸ்கூட்டர்களை வீதிகளில் இயக்குவதற்கு முன்னர் அதிகாரிகளால் வழங்கப்படும் நம்பர் பிளேட்களை பொருத்துவது கட்டாயமாகும்.
மேலும், சைக்கிள் மற்றும் மின்சார ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் வீதியின் வலது பக்கத்தில் பயணிக்க வேண்டும். சைக்கிள் பாதைகள் இல்லாத இடங்களில் ஒன்றன்பின் ஒன்றாகச் செல்ல வேண்டும். இரு கைகளாலும் ஹேண்டில்பாரைப் பிடித்திருக்க வேண்டும்; பாதுகாப்பு தலைக்கவசமும் அணிய வேண்டும்.
அத்துடன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொருட்களை எடுத்துச் செல்வது, ஒரு சக்கரத்தில் வாகனம் செலுத்துவது மற்றும் அனுமதியின்றி பயணிகளை ஏற்றிச் செல்வது போன்றவற்றுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புதிய சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பல மொழிகளில் தகவல்கள், வழிகாட்டல்கள், காணொளிகள் மற்றும் விளக்க நிகழ்ச்சிகளை வெளியிட உள்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது.

