வீட்டிலும் இல்லை, அலுவலகத்திலும் இல்லை! பூங்காவில் இருந்தபடியே வேலை செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்திய துபாய்!
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில், பொதுப் பூங்காக்களையே பணியிடங்களாக மாற்றும் வகையில் ‘Work From Park’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் முதலாவது மையம் அல் பர்ஷா பாண்ட் பூங்காவில் (Al Barsha Pond Park) நவம்பர் 2ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இங்கு திறந்தவெளிப் பணியிடங்கள், குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள், தனிப்பட்ட பணியிடங்கள் மற்றும் கூட்ட அறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பூங்காவின் வெளிப்புறப் பணியிடங்களைப் பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம். அதேவேளை, வசதிகளுடன் கூடிய அலுவலகங்களைப் பயன்படுத்துவதற்கு நாளொன்றுக்கு 50 திர்ஹம் முதல் கட்டணம் அறவிடப்படுகிறது. இந்த மையம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
துபாய் நகராட்சியும் தனியார் நிறுவனங்களும் இணைந்து முன்னெடுத்துள்ள இத்திட்டம், இயற்கைச் சூழலில் பணியாற்றுவதற்கும், நவீன வேலை முறைகளை ஊக்குவிப்பதற்கும் புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

