100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேரக் கண்காணிப்பு அதிகாரி கைது!
இலங்கையின் கம்பஹா பிராந்திய வீதிப் போக்குவரத்து அதிகாரசபை அலுவலகத்தைச் சேர்ந்த நேரக் கண்காணிப்பு அதிகாரி ஒருவர், 100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால், நேற்று (20) நண்பகல் 12.25 மணியளவில் ரத்தோலுகம பேருந்து நிலையத்திலுள்ள நேரக் கண்காணிப்பாளர் அறையில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத்தோலுகமவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் 188ஆம் இலக்க பேருந்தின் பயண நேரத்தைத் தாமதமாக ஆரம்பிப்பதற்கும், சாதகமான நேரத்தில் பயணத்தைத் தொடங்க அனுமதிப்பதற்கும் பேருந்து ஊழியரிடம் 100 ரூபாய் இலஞ்சமாகக் கோரிப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

