கனடா இராணுவத் தளத்தில் பயங்கர வெடிவிபத்து: 4 படையினர் உயிரிழப்பு, 39 பேர் காயம்
கனடாவின் அல்பர்ட்டா (Alberta) மாகாணத்தில் உள்ள வெய்ன்ரைட் கனேடியப் படைத் தளத்தில் (CFB Wainwright) ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து மற்றும் அதனைத் தொடர்ந்து பரவிய காட்டுத்தீ காரணமாக குறைந்தது நான்கு படைவீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 39 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (17) பிற்பகல் இத் தளத்தில் இந்த வெடிவிபத்து சம்பவித்துள்ளது. வெடிப்பைத் தொடர்ந்து உருவான பாரிய தீ, பலத்த காற்று காரணமாக இராணுவத் தள வளாகத்திலிருந்து சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), இத் துயரச் சம்பவத்தில் நான்கு படைவீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். பின்னர் கனேடிய அரசாங்கம் வெளியிட்ட உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் சார்ஜன்ட் மோர்கன் வோங் (Sergeant Morgan Wong) , சிப்பாய் ஷான் பாரல் (Private Shaun Farrell) சிப்பாய் எய்டன் கவுல்டிங் (Private Aidan Goulding) சிப்பாய் ஹேடன் லிக்கெமார்க் (Private Hayden Lykkemark) ஆகியோா் உயிாிழந்துள்ளனா்.
விபத்தில் கனேடிய ஆயுதப் படையைச் சேர்ந்த 39 வீரர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவத்தை “சமாதான காலத்தில் கனேடிய மண்ணில் இராணுவத்திற்கு ஏற்பட்ட மிக மோசமான துயரங்களில் ஒன்று” என பிரதமர் மார்க் கார்னி விபரித்துள்ளார். அத்துடன், வெய்ன்ரைட் நகருக்கு அருகிலுள்ள இராணுவத் தளத்தில் சனிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி (David McGuinty):
“சமீப காலத்தில் இதுபோன்றதொரு பாரிய சம்பவத்தை நான் நினைவுகூர முடியவில்லை” எனக் கவலை வெளியிட்டுள்ளார்.
இவ் வெடிவிபத்து மற்றும் தீ விபத்துக்கான துல்லியமான காரணங்கள் குறித்து கனேடிய பாதுகாப்புத் துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

