அதிகாரிகளின் தவறால் ஞானசார தேரருக்கு மீண்டும் சிறை

அதிகாரிகளின் தவறால் ஞானசார தேரருக்கு மீண்டும் சிறை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி விளக்கம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பௌத்த மகா சங்கத்தினரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

 

இது தொடர்பாக இன்று (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

தாம் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறையில் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளால் தொழில்நுட்பத் தவறு இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

குறித்த மன்னிப்பை வழங்குவதற்கு நீதித்துறை மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பிரிவு அதிகாரி தமக்கு அறிவித்திருந்தபோதிலும், உரிய அனுமதி பெறப்படாமல் தனது கையொப்பம் மாத்திரம் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதன் காரணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தொழில்நுட்பக் குறைபாடு ஏற்பட்டதாகவும், நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தாம் மதிப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

 

மேலும், தமது அதிகாரிகளால் ஏற்பட்ட தவறுக்காகப் பௌத்த மகா சங்கத்தினரிடம் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin