வெனிசுலாவின் கார்டன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிவிபத்து!!
உற்பத்தி பணிகள் தற்காலிகமாக முடக்கம்!
வெனிசுலாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 310,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட கார்டன்
(Cardon) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்ததை அடுத்து, அதன் ஒட்டுமொத்த செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன.
இயற்கை எரிவாயுக் குழாய் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து உருவான இந்தத் தீ விபத்து, ஒரு மணி நேரத்திற்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும்,
ஆலை முழுமையாக மின்சாரம் மற்றும் செயல்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், போதிய கச்சா எண்ணெய் கிடைக்காத காரணத்தால் இந்த வளாகத்தின் சில பிரிவுகள் முன்னரே செயலற்று இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணை நெருக்கடிகள் மற்றும் சவூதி எண்ணெய் தளங்கள் மீதான ஹூதி அமைப்பினரின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில்,
அமெரிக்கா தனது மாற்று எண்ணெய் விநியோகத் தேவைகளுக்கு வெனிசுலாவை பெரிதும் சார்ந்திருக்கும் ஒரு சூழலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவுக்கான எண்ணெய் இறக்குமதி 237 வீதத்தால் உயர்ந்து 9 ஆண்டு கால உச்சத்தை எட்டியுள்ளதாகவும்,
செவ்ரான் (Chevron) நிறுவனம் அங்கு உற்பத்தியை அதிகரிக்க 7 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானிய ட்ரோன்கள் அல்லது ஹூதிகளின் ஏவுகணை அச்சுறுத்தல்கள் இல்லாத அருகாமை நாடாக வெனிசுலா விளங்குவதால்,
அங்குள்ள பி.டி.வி.எஸ்.ஏ (PDVSA) நிறுவனத்தின் பழுதடைந்த கட்டமைப்பு வசதிகளைச் சீரமைப்பது அமெரிக்காவின் எரிசக்திப் பாதுகாப்புசார் விவகாரமாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

