பிரித்தானிய விமான நிலையங்களில் புதிய தொழினுட்பம்!!
கடவுச்சீட்டை காண்பிக்காமலேயே eGates ஊடாகப் பயணிக்கும் வசதி அறிமுகம்!
பிரித்தானியாவிற்கு வருகை தரும் பயணிகள், தமது கடவுச்சீட்டை (Passport) ஸ்கேனர் இயந்திரங்களில் காண்பிக்காமலேயே நேரடியாகப் பயணிக்கக்கூடிய
புதிய ‘தொடர்பற்ற’ (Contactless) முறைமை விமான நிலையங்களின் தானியங்கி நுழைவாயில்களில் (eGates) அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக பிரித்தானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இப்புதிய திட்டத்தின் முதற்கட்டமாக, லெய்செஸ்டர்ஷயரிலுள்ள (Leicestershire) ஈஸ்ட் மிட்லான்ட்ஸ் விமான நிலையத்தில்
(East Midlands Airport) செவ்வாய்க்கிழமை இந் நவீன தொழினுட்பம் முதன்முறையாகச் செயற்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.
பயணிகள் நுழைவாயிலை நோக்கி வரும்போது, நவீன முக அடையாள தொழினுட்பத்தின் மூலம் அவர்களது முகம் படம் பிடிக்கப்பட்டு,
அதிகாரப்பூர்வ பயண விபரங்கள், கடவுச்சீட்டு மற்றும் குடிவரவுத் தரவுகளுடன் நொடிப்பொழுதில் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்படும். தரவுகள் உறுதிப்படுத்தப்பட்டவுடன் தானியங்கி நுழைவாயில்கள் தானாகவே திறக்கும்.
இதனால் கடவுச்சீட்டை ஸ்கேனரில் வைத்து எடுக்கும் தேவை இல்லாது போகின்றது.
ஆரம்பக்கட்டப் பரிசோதனைகளின்படி, வழமையான முறையில் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி eGates ஊடாகச் செல்வதை விட இப்புதிய முறைமை 25 சதவீதம் வரை விரைவானது
என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏதேனும் மேலதிக சோதனைகள் தேவைப்படும் பட்சத்தில் மாத்திரம், பயணிகள் தமது கடவுச்சீட்டை ஸ்கேனரில் வைக்க வேண்டும்
அல்லது எல்லைப் பாதுகாப்புப் படை (Border Force) அதிகாரியிடம் செல்லுமாறு பணிக்கப்படுவார்கள்.
ஈஸ்ட் மிட்லான்ட்ஸ் விமான நிலையத்தின் தொடக்கத்தைத் தொடர்ந்து, 2027 ஆம் ஆண்டின் ஆரம்பத்திற்குள் பிரித்தானியாவிலுள்ள அனைத்து
விமான நிலையங்களின் eGates நுழைவாயில்களுக்கும் இத்தொழினுட்பம் விரிவுபடுத்தப்படும் என உள்துறை அமைச்சு (Home Office) தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு உதவ எல்லைப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து பணியில் இருப்பார்கள் எனவும், பயணிகள் எந்நேரமும்
தமது கடவுச்சீட்டைத் தம்மோடு வைத்திருக்க வேண்டும் எனவும் உள்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் எல்லைப் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் பில் டக்ளஸ் (Phil Douglas) கருத்துத் தெரிவிக்கையில், “பிரித்தானியாவின் பலமான எல்லைப் பாதுகாப்பை முழுமையாகப் பேணிக்கொண்டே,
அதிநவீன தொழினுட்பத்தின் ஊடாகப் பயணிகளின் வருகையை மிகவும் இலகுவானதாகவும் வேகமானதாகவும் நாம் மாற்றுகின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

