எரிபொருள் விலை உயர்வு!
G7 நாடுகள் அவசர நடவடிக்கை – 100 மில்லியன் பீப்பாய் எண்ணெய் கையிருப்பு விடுவிப்பு
உலகளவில் பெட்ரோல் மற்றும் குறிப்பாக டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தலைமையில் இன்று G7 நாடுகளின் தலைவர்கள் அவசர காணொலி மாநாட்டில் ஆலோசனை நடத்தினர். பிரான்ஸ் தற்போது G7 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் மக்ரோன் இன்று தொலைபேசியில் பேசியிருந்தார்.
உலக எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விநியோகத்தை அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
ஐரோப்பிய நாடுகள் தங்களது அவசரகால டீசல் கையிருப்பிலிருந்து ஒரு பகுதியை சந்தைக்கு விட வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வந்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற G7 ஆலோசனையில், சுமார் 100 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் டீசல் கையிருப்பை அடுத்த நான்கு மாதங்களில் ஒருங்கிணைந்த முறையில் சந்தைக்கு விடுவதற்கு G7 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
இதில் கணிசமான அளவு டீசல் முதல் 20 நாட்களிலேயே சந்தைக்கு வருவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையை சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) ஒருங்கிணைக்கும்.
மேலும், G7 நாடுகளுக்கிடையே எரிபொருள் மற்றும் எரிசக்திப் பொருட்களின் ஏற்றுமதிக்கு புதிய தடைகள் விதிக்கப்படாது என்றும் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதன் மூலம் சந்தையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதும், விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதும் நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவு பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உடனடியாக எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
ஆனால், கையிருப்பிலிருந்து எரிபொருளை விடுவிப்பதன் மூலம் உலக சந்தையில் விநியோக அழுத்தத்தைக் குறைத்து விலை உயர்வைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

