பரிஸில் நாளொன்றுக்கு 25,000 யூரோக்கள் திருடிய சிறுவர்கள்!!

பரிஸில் நாளொன்றுக்கு 25,000 யூரோக்கள் திருடிய சிறுவர்கள்!!

சொகுசு வாழ்க்கை வாழ்ந்த மாபியா கும்பல் !

நீதிமன்றில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!

பாரிஸ் வீதிகளில் சிறுவர்களைப் பயன்படுத்தி நாளொன்றுக்கு 25,000 யூரோக்கள் வரை கொள்ளையடித்து,

 

அந்தப் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ‘ஹமிடோவிச்’ (Hamidovic) குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் பாரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

 

6 முதல் 9 பேர்கொண்ட குழுக்களாக இந்தச் சிறுவர்கள்/சிறுமிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். பாரிஸ் சார்ல்ஸ் து கோல் (Roissy) விமான நிலையம்,

 

டிஸ்னிலாண்ட் (Disneyland Paris), மார்ன்-லா-வலே (Marne-la-Vallée) RER தொடருந்து நிலையங்கள் மற்றும் பாரிஸ் மெட்ரோ ஆகிய சனநெரிசல் மிக்க பகுதிகளே இவர்களின் பிரதான இலக்குகளாக இருந்துள்ளன.

 

குறிப்பாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து அவர்களின் பணப்பைகள்,

 

ரொக்கப் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை இந்தச் சிறுவர்,சிறுமிகள் திருடியுள்ளனர். டிஸ்னிலாண்டில் மாலை நேரங்களில் நடைபெறும் அணிவகுப்பின்

 

(parade) போது ஏற்படும் நெரிசலை இவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு திருடப்படும் பொருட்கள் மற்றும் பணம் அனைத்தையும் மாலையில் குடும்பத்தின் பெரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

 

இதன் மூலம் நாளொன்றுக்குச் சராசரியாக 25,000 யூரோக்கள் வரை இந்தக் கும்பல் சுருட்டியுள்ளது.

 

இந்தக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சிறுவர் சிறுமிகள் 10 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்.

 

இவர்களில் பெரும்பாலானோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெரியவர்களின் பிள்ளைகளே ஆவர்.

 

“வேர்கள் இல்லாத, எதிர்காலம் இல்லாத சிறுவர்கள் இவர்கள். இவர்களின் பிறந்த திகதி கூட இவர்களது பெற்றோருக்குத் தெரியாது” என அரச சட்டத்தரணி அலிஸ் கியெட் (Alice Guillet) நீதிமன்றத்தில் வேதனையுடன் தெரிவித்தார்.

 

இந்தச் சிறுவர்கள் திருடுவதைத் தவிர வேறு வழியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

போதிய பணத்தைக் கொண்டு வராவிட்டால் அடி, உதை, தீக்காயங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் எனப் பல கொடூரமான தண்டனைகளை இவர்கள் அனுபவித்துள்ளமை விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

 

இவர்கள் புறநகர்ப் பகுதிகளில் உள்ள மலிவு விலை விடுதிகளிலும், பாழடைந்த கட்டடங்களிலுமே (squats) தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

சிறுவர்,சிறுமிகள் ஒருபுறம் நரக வேதனையை அனுபவிக்க, மறுபுறம் பெரியவர்கள் சிறுவர்கள் கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

 

பணக்கட்டுகளைப் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது, சூதாட்ட விடுதிகள் (casinos), சொகுசு விடுதிகள் மற்றும் விலையுயர்ந்த உணவகங்களுக்குச் செல்வது என இவர்களின் வாழ்க்கை இருந்துள்ளது. ரொபேர்டோ ஹமிடோவிச் ஜூனியர் (Roberto Hamidovic Junior) என்பவர், தனது சகோதரன் சிறையிலிருந்து விடுதலையானதைக் கொண்டாடுவதற்காகப் பாரிஸ் இரவு விடுதியொன்றில் இரண்டு போத்தல் ஷாம்பெயினுக்கு (champagne) மட்டும் 1,420 யூரோக்களைச் செலவிட்டமை விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்டது.

 

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த 48 வயதான பிரதான சந்தேகநபரான ரொபேர்டோ ஹமிடோவிச், கார் வியாபாரம் மூலமாகவே மாதத்திற்கு 2,000 முதல் 5,000 யூரோக்கள் வரை உழைப்பதாக வாதிட்டார். எனினும் இதனை அரச தரப்பு முற்றாக நிராகரித்தது.

 

நேற்று (செப்டெம்பர் 22) நடைபெற்ற விசாரணையில், ரொபேர்டோ ஹமிடோவிச்சுக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 800,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட வேண்டும் என அரச தரப்பு கோரியுள்ளது.

 

அவரது மனைவி லெஜ்லாவுக்கு (Lejla) 7 ஆண்டுகள் சிறையும், 200,000 யூரோக்கள் அபராதமும், ஏனைய 5 பேருக்கு 5 முதல் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 50,000 முதல் 400,000 யூரோக்கள் வரை அபராதமும் கோரப்பட்டுள்ளது. அத்துடன், இவர்கள் அனைவரையும் பிரான்சிலிருந்து நிரந்தரமாக நாடுகடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

“இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கும் இவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் இதேபோன்று சிறுவர்களாக இருந்தபோது தங்கள் பெற்றோருக்காகத் திருட நிர்ப்பந்திக்கப்பட்டவர்களே.

 

பாதிக்கப்பட்டவர்கள் இன்று கொடூரர்களாக (bourreaux) மாறியுள்ளனர்” என அரச சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

 

மீட்கப்பட்ட சிறுவர்களில் சிலர் மீண்டும் தப்பியோடியிருந்தாலும், காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்ட சில சிறுவர்கள் தற்போது கல்வியில் சிறந்த ஈடுபாடு காட்டி, புதியதொரு

 

வாழ்க்கையை நோக்கி நடைபயிலத் தொடங்கியுள்ளமை நீதிமன்றத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தால் வழங்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: admin