ஒரு தலைமுறையின் அடையாளத்தை யார் தீர்மானிக்கிறார்கள்?
ஒரு குடும்பம் தனது தாய்நாட்டை விட்டு அகதியாக வெளியேறுகிறது. போர், இனவழிப்பு, அரசியல் சூழ்நிலை, உயிர் பாதுகாப்பு இப்படி ஈழதமிழரின் ஒரு தலைமுறை வேற்றுமண்ணில் தஞ்சம் புகுந்தார்கள்.
அங்கேயே வாழ்க்கையைத் தொடங்கினர். அவர்களின் குழந்தைகள் அந்த மண்ணிலேயே பிறக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு அந்த நாடுதான் பிறந்த மண், அந்த நாட்டின் கல்வி, மொழி, சமூக சூழல், சட்டப்பூர்வ குடியுரிமை, நண்பர்கள், வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் அவர்களின் அடையாளத்தை உருவாக்குகின்றன. ஆனாலும் அவர்கள் தமது கனவுதேசத்தை காணவிரும்புகிறார்கள்.
தாம் நாடின்றி அலைந்த நாட்களின வரலாற்றில் மூழ்கியது தான் அவர்களது அடையாளம்.
அப்படிப்பட்ட ஒரு தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் பின்னர் பிரபலமானவராகி, “நான் இலங்கையர் அல்ல,நான் கனடியர்” என்று கூறுகிறார் எனில், அதைக் கேட்டு ஏன் இவ்வளவு கோபம் சிங்களவர்கள் அடைகிறார்கள்?
தனது அடையாளத்தைத் தானே தீர்மானிக்கும் உரிமை ஒருவருக்கு இல்லையா?
ஒருவரின் பெற்றோர் உரிமைகள் மறுக்கப்பட்ட இலங்கையில் பிறந்தவர்கள் என்பதற்காக, அவர் பிறந்ததும் வளர்ந்ததும் வேறு நாட்டில் என்ற உண்மையை மறைத்து, “நீ இலங்கையர்தான்” என்று இவர்கள் கட்டாயப்படுத்த முடியுமா? பிறந்த மண், வளர்ந்த சூழல், குடியுரிமை,
தனிப்பட்ட அனுபவம், தாய்தந்தை வழிவந்த உளத்தின் அடையாளம் ஆகியவற்றுக்கு அதில் இடமில்லையா?
புலம்பெயர்ந்த சமூகங்கள் “உங்கள் வேர்களை மறந்துவிடவில்லை தாய்மொழியைப் பாதுகாக்க வேண்டும், கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும், முன்னோர்களின் வரலாற்றை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுவதில் இவர்களுக்கு ஏன் பயம் மேலிடுகிறது..?
நாடுகள் கடந்து அவர்கள் சாதிக்கும் போதும் பிரபலாமாகும் போதும் “எனது தேசிய அடையாளம் வேறு” என்று கூறும்போது மட்டும் ஏன் கோபம் உருவாகிறது?
ஒருவரின் கருத்துடன் உடன்படவில்லை என்றால், அந்தக் கருத்துக்கு கருத்தால் பதில் அளிக்கலாம். வரலாற்றுத் தகவல்களைக் கூறலாம்.
குடும்பப் பின்னணியைப் பற்றி விவாதிக்கலாம். ஆனால் தனிப்பட்ட அவதூறாக மாற்றும் சிங்களவர்களது அடிப்படை மனோநிலை என்ன?
குறிப்பாக, ஒரு பெண் தனது தேசிய அடையாளத்தைப் பற்றி கருத்து தெரிவித்தவுடன், அவளை “நாடற்றவள்”, “கோழை” என்று அழைப்பதும், அவளது பாலினத்தை முன்வைத்து அவதூறாகப் பேசுவதும், அவளது உடலைக் குறிவைத்து பாலியல் ரீதியான கேலிப்படங்களை உருவாக்குவதும் எதை வெளிப்படுத்துகிறது?
ஒரு பெண்ணின் கருத்தை எதிர்க்க முடியாதபோது, ஏன் அவளது உடல் தாக்குதலுக்கான கருவியாகிறது?
சிறிது நாட்களின் முன்பு தமிழீழ பென்டன் அணிந்த இன்ஸரா பிரபலத்தைத் தாக்கினர். இப்போது கனடிய நட்சத்திரமான மைத்ரேயியைத் தாக்குகிறார்கள்.
இங்கு உளவியல் ரீதியாக இன்னொரு கேள்வியும் எழுகிறது. போரில் நேரடியாக ஈடுபடாத அடுத்த தலைமுறையினர்கூட, தங்கள் பெற்றோரின் வரலாற்றின் அடையாளத்தை சுமக்க வேண்டிய நிலையில் தள்ளுவது இலங்கையின் குரோத எண்ணம் கொண்ட சிங்களவர்கள் என்பது தானே வெளிப்படை..?
தேசிய அடையாளம் என்பது மிகவும் ஆழமான மனித அனுபவம். ஒருவருக்கு அது பிறந்த நாடாக இருக்கலாம். இன்னொருவருக்கு குடியுரிமை பெற்ற நாடாக இருக்கலாம்.
மற்றொருவருக்கு பெற்றோரின் தாய்நாடாக இருக்கலாம். இன்னொருவருக்கு இரண்டு நாடுகளுடனும் தொடர்புடையதாக இருக்கலாம். இன்னொருவருக்கு எந்த ஒரு நாட்டுடனும் முழுமையான தொடர்பு இல்லாததாக இருக்கலாம்.
எமது புலம்பெயர் தலைமுறைகள் இந்த சிக்கலான அடையாளங்களுக்கிடையேதான் வாழ்கின்றன.
அவர்களை ஒரு பெட்டிக்குள் அடைத்து, “உன் பெற்றோர் எங்கிருந்து வந்தார்கள் என்பதை வைத்து நீ யார் என்பதை நாங்களே தீர்மானிப்போம்” என்று கூற முடியுமா?
அப்படியானால் ஒரு மனிதனின் அடையாளம் அவனுடைய தனிப்பட்ட உரிமை என்பதை இவர்கள் மறுப்பது குற்றமில்லையா..?
ஒருவரின் கருத்தை விமர்சிக்கலாம். அவரது வரலாற்றைப் பற்றி கேள்வி எழுப்பலாம். அவரது கருத்துடன் கடுமையாக முரண்படலாம். ஆனால் ஒரு மனிதனை மனிதராகவே மறுக்கும் அளவுக்கு செல்வதும், குறிப்பாக ஒரு பெண்ணை பாலியல் அவதூறுகளால் தாக்குவதும், வெறும் கருத்து வேறுபாடு அல்ல. அது எமது சமூகத்தின் சகிப்புத்தன்மையையும்,
தலைமுறைகளாகச் சுமந்து வரப்படும் வரலாற்றுக் காயங்களையும், எமது தமிழ்ப்பெண்களின் தலைமுறைகளாக சிங்கள அதிகாரத்தினரிடம் எதிர்கொள்ளும் வன்முறை வெளிப்பாடன்றி வேறென்ன?
“நீ யார்?” என்று அவளிடம் கேட்பதற்கு முன், “அவள் யார் என்பதை தீர்மானிக்க நமக்கு என்ன உரிமை?” என்று அவர்கள் தம்மை கேட்க வேண்டிய நேரமிது.
போர் முடிந்திருக்கலாம். எல்லைகள் மாறாமல் இருக்கலாம். நாடுகள் தங்கள் அரசியல் வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கலாம். ஆனால் அந்தப் போரின் நினைவுகளும் வெறுப்புகளும் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப்பட்டுக்கொண்டே இருந்தால், அதன் விளைவுகள் இன்னும் சமூக மனங்களில் உயிரோடு இருக்கின்றன என்பதே உண்மை.
ஒரு தனிமனித சுதந்திரத்தைக் கடல் கடந்தும் தலைமுறை தாண்டியும் மதிக்கத் தெரியாத சிங்களத்தின் பலவீனமான பயந்த மனோநிலையை புலம்பெயர்ந்த எமது தலைமுறையினர் மீது வன்மமாக கொட்டி உளவியல் தாக்கத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படை.
திலீபத்தின் உடலில் இருந்து செத்துக்கொண்டிருந்த ஒவ்வொரு அணுக்களும் செய்து கொண்டிருக்கும் மக்கள் பு ர ட் சி காலங்கடந்தும் தலைமுறை தாண்டியும் நடக்கிறது என்பதை தமிழர்களாக ஆழ உணர்வதே இங்கு விழிப்புணர்வு.

