பாகிஸ்தானில் பள்ளிவாசல் மீது தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்: 5 காவற்துறையினர் உட்பட 15 பேர் பலி – 56 பேர் படுகாயம்!
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலுள்ள பள்ளிவாசல் (மசூதி) ஒன்றின் மீது நடத்தப்பட்ட பயங்கர வெடிகுண்டுத் தாக்குதலில் 5 காவற்துறையினர் உட்படக் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 56 பேர் படுகாயமடைந்துள்ளனர். காவற்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள வளாகத்திற்கு மிக அருகாமையிலேயே இத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசலிலேயே இந்நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்றைப் பள்ளிவாசல் மீது மோதச் செய்தே இத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளிவாசல் கட்டிடம் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதுடன், அருகிலிருந்த காவல் நிலையக் கட்டிடத்தின் வெளிப்புறச் சுவர்களும் இடிந்து விழுந்துள்ளன.
வெடிகுண்டு வெடிப்பைத் தொடர்ந்து, ஆயுதமேந்திய இருவர் காவற்துறை வளாகத்தினுள் நுழைய முற்பட்டுள்ளனர். அப்போது காவற்துறையினருக்கும் அவர்களுக்குமிடையே இடம்பெற்ற கடுமையான துப்பாக்கிச் சமரில் தாக்குதல்தாரிகளில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் தொழுகைக்காக வந்திருந்த பொதுமக்கள் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்துள்ள பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

