சவூதிக்கு 24 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் போட்ட அமெரிக்கா!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில், சவூதி அரேபியாவுக்கு 24.3 பில்லியன் டொலர் பெறுமதியான 48 F-35 ஸ்டீல்த் (Stealth) ரகப் போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அனுமதி அளித்துள்ளது.
ஈரான் மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ரியாத் அரசாங்கம் மேற்கொள்ளும் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான பாதுகாப்பு ஆயுதக் கொள்முதல் இதுவாகும்.
பிராந்திய சுய பாதுகாப்பை உறுதி செய்வதையும் அமெரிக்கப் படைகளுடனான கூட்டுச் செயல்பாட்டை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வொஷிங்டன் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பிராந்தியத்தில் இஸ்ரேலின் இராணுவ மேலாதிக்கத்தைப் பேண வேண்டும் என்ற நீண்டகாலக் கொள்கை மற்றும் இத்தொழில்நுட்பம் சீனாவிற்குச் சென்றுவிடுமோ என்ற அச்சம் காரணமாக, அமெரிக்க காங்கிரஸ் மற்றும் இஸ்ரேல் தரப்பில் இக்கொள்முதல் குறித்துக் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
இவ்விற்பனை நிறைவேறுவதற்கு அமெரிக்க காங்கிரஸின் இறுதி அனுமதி அவசியமாகும். யேமன் மோதல் மற்றும் ஹூதிகளின் கடல்சார் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்த இது பெரிதும் உதவும் அதேவேளை, மத்திய கிழக்கின் மூலோபாய சமநிலையிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

