FCID விசாரணை அழைப்பின் மத்தியில் வெளிநாடு சென்ற ஷிரந்தி ராஜபக்ஷ – வெளியானது காரணம்
நிதிப் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அழைப்பானை விடுக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளதாகப் பரவிவரும் செய்திகளுக்கு ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் பதிலளித்துள்ளார்.
தனியார் வைத்தியசாலையிலிருந்தே ஷிரந்தி ராஜபக்ஷ நேரடியாகக் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றதாகவும், எஃப்.சி.ஐ.டியினரால் அவருக்கு முன்னதாக எந்தவொரு அழைப்பானையும் விடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலைய நுழைவாயிலில் இருந்தபோதே அதிகாரி ஒருவரால் எஃப்.சி.ஐ.டி அழைப்பானைக் கடிதம் கையளிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைக்காக செப்டம்பர் 24 ஆம் திகதி எஃப்.சி.ஐ.டி முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்குக் சம்மன் அனுப்பப்பட்டிருந்ததாக ஏனைய செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் இன்று (செப்டம்பர் 16) அதிகாலை 1.10 மணிக்கு SQ-469 இலக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவர் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்புவார் என ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

