அஸ்வசும பயனாளிகள் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை – நுவரெலியாவில் பரபரப்பு!
அஸ்வசும (Aswesuma) நிவாரணத் திட்டத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகளைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் தகுதிபெற்ற பயனாளிகளின் பெயர் பட்டியல் இம்மாதத்தின் முதல் வாரத்திற்குள் காட்சிப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும், அந்தப் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை என அஸ்வசும உதவித்தொகை கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வங்கிப் கணக்குகளில் பணம் சரியாகச் வைப்பிலிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே நிதி அமைச்சு இந்த பெயர் பட்டியலை காட்சிப்படுத்த தீர்மானித்திருந்தது.
நோர்வூட், தலவாக்கலை, நுவரெலியா உள்ளிட்ட நுவரெலியா மாவட்டத்தின் அனைத்துப் பிரதேச செயலகங்களுக்கும், பெருந்தோட்டப் பகுதிகளில் அஸ்வசும திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் தகுதிபெற்றும் கணக்கில் பணம் வைப்பிலிடப்படாத பெருந்திரளான மக்கள் தினமும் வந்து விவரங்களை வினவி வருகின்றனர்.
எனினும், தமக்கு இதுவரையில் குறித்த பெயர் பட்டியல் கிடைக்கப்பெறவில்லை என்றே பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிப்பதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

