மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட பின்தங்கிய பிரான்ஸ்!
புதிய குடியேற்றத் தரவரிசையில் அதிர்ச்சித் தகவல்
வாழ்க்கைத்தரம், குடும்பத்துடன் வாழ்வது மற்றும் ஓய்வூதிய காலம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள புதிய உலகளாவிய குடியேற்றத் தரவரிசையில்,
பிரான்ஸ் நாடு தனது மேற்கு ஐரோப்பிய அயல்நாடுகளை விட மிகவும் பின்தங்கியுள்ளது.
‘2026 ருமாவி உலகளாவிய குடியேற்றச் சுட்டெண்’ (Rumavi Global Relocation Index) வெளியிட்டுள்ள பட்டியலின்படி, ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரத்தில் பிரான்ஸ் 192 நாடுகளில் 79ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரிட்டன் போன்ற பல மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பின்னாலேயே பிரான்ஸ் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கைத்திறனுக்கான குறியீட்டில் பிரான்ஸ் 100-க்கு 70 புள்ளிகளைப் பெற்று வலுவான நிலையைக் காட்டியிருந்தாலும், நிதி மற்றும் பாதுகாப்பு போன்ற பிற துறைகளில் அதன் புள்ளிகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
குறிப்பாக, நிதி காரணிகளுக்கு 48 புள்ளிகளையும், பாதுகாப்புக்கு 63 புள்ளிகளையும், குடியேறி வாழத் தங்குவதற்கான வசதிகளுக்கு 71 புள்ளிகளையும் பிரான்ஸ் பெற்றுள்ளது. இதே போன்ற பின்தங்கிய நிலையே குடும்பங்கள் மற்றும்
ஓய்வூதியதாரர்களுக்கான தனித்தனி தரவரிசைகளிலும் எதிரொலித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
குடும்பமாக வாழ்வதற்கான தரவரிசையில் பிரான்ஸ் 62 புள்ளிகளுடன் 79ஆவது இடத்தைப் பெற்றுள்ளது;
இதில் போர்ச்சுகல் 5ஆவது இடத்திலும், ஸ்பெயின் 25ஆவது இடத்திலும் உள்ளன. ஓய்வூதியதாரர்களுக்கான பட்டியலில் பிரான்ஸ் மேலும் சரிந்து, 60.5 புள்ளிகளுடன் 123ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது;
இதில் போர்ச்சுகல் 3ஆவது இடத்தையும், ஸ்பெயின் 18ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
குடும்பத் தரவரிசையானது பள்ளிகள், குழந்தைப் பராமரிப்பு, சுகாதாரம், தெருக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத்தரத்தை அடிப்படையாகக் கொண்டது.
மறுபுறம், ஓய்வூதியதாரர்களுக்குச் சுகாதாரம், வாழ்க்கைச் செலவு, சீதோஷ்டநிலை மற்றும் நீண்டகால வதிவிட வாய்ப்புகள் ஆகியவை முக்கியக் காரணிகளாகக் கருதப்பட்டுள்ளன.
இந்தச் சுட்டெண் டிஜிட்டல் நாடோடுகள், தொழில்முனைவோர் மற்றும் வரி நட்புத் தன்மைகளுக்கான தனித்தனி பட்டியல்களையும் உள்ளடக்கியுள்ளது;
இதில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் 59.9 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. எனினும், இந்த முடிவுகள் ஒரு நிறுவனத்தின் சொந்த முறையியலின் அடிப்படையிலானவை என்பதும்,
குடியேற்ற முடிவுகளில் தாங்கள் கமிஷன் பெறுவதில்லை என்றும் குடியேற்ற மற்றும் சொத்து ஆலோசனை நிறுவனமான ‘ருமாவி’ விளக்கமளித்துள்ளது.

