சீனி சேர்க்கப்படாத குடிபானங்கள் மீதான வரிவிதிப்புத் திட்டத்தைக் கைவிடுவதாக ஜேர்மனி அறிவிப்பு!

ஜேர்மனியில் சீனி சேர்க்கப்படாத குடிபானங்கள் (Boissons sans sucre) மீது விதிக்கப்படவிருந்த புதிய வரியை அரசாங்கம் கைவிட்டுள்ளது.

நிதி அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட இந்தத் திட்டத்திற்குப் பெரும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என ஜேர்மனிய நிதி அமைச்சர் லார்ஸ் கிளிங்பெய்ல் (Lars Klingbeil) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு வரிவிதிப்பு முற்றிலும் அபத்தமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரெட்ரிக் மேர்ட்ஸ் (Friedrich Merz) தலைமையிலான அரசாங்கம் ஆரம்பத்தில் வெளியிட்ட ஆவணங்களின்படி, சீனி சேர்க்கப்பட்ட குடிபானங்களுக்கு அப்பால், செயற்கை இனிப்பூட்டிகள் (Édulcorants) சேர்க்கப்பட்ட மென்பானங்கள், மதுசாரமற்ற பியர் (Bière sans alcool) மற்றும் சுவையூட்டப்பட்ட பால் பானங்கள் போன்றவற்றுக்கும் இந்த வரியை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

பானங்களில் உள்ள சீனியின் அளவைப் பொறுத்து லீற்றருக்கு 26 முதல் 38 சதம் (Centimes) வரை வரியாக அறவிடவும், இதன் மூலம் ஆண்டுக்கு 2 முதல் 4 பில்லியன் யூரோக்கள் வரை வருமானத்தைப் பெறவும் மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும், பொது நிதியை நிரப்புவதற்காகவே இத்திட்டம் கொண்டுவரப்படுவதாகப் பொருளாதார நிபுணர்களும் ‘சி.டி.யூ’ (CDU) கட்சிப் பிரதிநிதிகளும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

விமர்சனங்களைத் தொடர்ந்து, இதுவொரு உள்ளக ஆலோசனை மட்டுமே எனவும், சீனி சேர்க்கப்படாத குடிபானங்களுக்கு எவ்வித வரியும் விதிக்கப்பட மாட்டாது எனவும் நிதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இருப்பினும், கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்கு நிதியளிக்கும் நோக்கில், சீனி சேர்க்கப்பட்ட குடிபானங்கள் (Boissons sucrées) மீதான வரியை எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தும் திட்டத்தை ஜேர்மனி தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin