ஜேர்மனியின் பிராங்பேர்ட் (Francfort) விமான நிலையத்தில், வெளிநாட்டிலிருந்து விமானம் ஊடாக வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மலேரியா (Paludisme) நோய் காவியான நுளம்பு கடித்ததில் விமான நிலையப் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், மேலும் ஐந்து பணியாளர்கள் மலேரியாத் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை விமான நிலைய நிர்வாகம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதுடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துள்ளது.
‘அனோபிலிஸ்’ (Anophèles) வகையைச் சேர்ந்த நுளம்புகளால் பரவும் இந்த மலேரியா நோய், கடுமையான காய்ச்சல், குளிர், தலைவலி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒட்டுண்ணித் தொற்றாகும்.
ஆப்பிரிக்க நாடுகளில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இந்நோய், ஜேர்மனியில் மிகவும் அரிதானதாகும்.
ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் இதனை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்றாலும், ஜேர்மனியில் இந்நோய் அரிதானது என்பதால் நோயைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அந்நாட்டின் சுகாதார அமைப்பான ரொபர்ட் கோச் நிறுவனம் (RKI) சுட்டிக்காட்டியுள்ளது.
விமானங்கள் ஊடாக நுளம்புகள் பரவுவதால் ஏற்படும் இந்தத் தொற்று ‘விமான நிலைய மலேரியா’ (Paludisme d’aéroport) என அழைக்கப்படுகின்றது.
இத்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், விமான நிலைய வளாகத்தில் நுளம்புகளைப் பிடிப்பதற்கான சிறப்புப் பொறிகள் (Pièges à moustiques) தற்போது பொருத்தப்பட்டுள்ளன.
இதில் பிடிக்கப்படும் நுளம்புகள், அவற்றின் தோற்றுவாயைக் கண்டறிவதற்காகப் பெல்ஜியத்தில் உள்ள அன்ட்வெர்ப் (Anvers) வெப்பமண்டல மருத்துவ நிறுவனத்திற்கு மரபணுப் பகுப்பாய்விற்காக (Analyses génétiques) அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இதற்கு முன்னர் ஜேர்மனியில் இவ்வாறானதொரு ‘விமான நிலைய மலேரியா’ தொற்று 2023-ஆம் ஆண்டிலேயே பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

