கங்காரு தேசத்தில் பறவைக் காய்ச்சல் தீவிரம்: நரியும் பாதிப்பு!

ஆஸ்திரேலியாவில் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் மேலும் 5 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் அடிலெய்ட் பெருநகரப் பகுதிக்குட்பட்ட ஆஸ்போர்னில் (Osborne) உள்ள ஒரு சிவப்பு நரிக்கும், ரோப் (Robe) பகுதியில் உள்ள ஓர் ஆஸ்திரேலியக் காகத்திற்கும் பறவைக் காய்ச்சல் தொற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் முதன்மைத் தொழில்கள் மற்றும் பிராந்தியங்கள் துறை (PIRSA) வெளியிட்ட சமீபத்திய பறவைக் காய்ச்சல் நிலவர அறிக்கையில், இந்த நரி உட்பட ஐந்து புதிய சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இவற்றுக்கான மாதிரிச் சோதனைகள், இறுதி உறுதிப்படுத்தலுக்காக ஜீலாங்கில் (Geelong) உள்ள தேசிய ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் பதிவாகியுள்ள 5 புதிய சந்தேகத்திற்குரிய பாதிப்புகளில், லைம்ஸ்டோன் கடற்கரை (Limestone Coast) பகுதியில் கண்டறியப்பட்ட ஓர் ஆஸ்திரேலியக் காகம் மற்றும் சிறிய பென்குயின், கூனால்பின் (Coonalpyn) பகுதியில் உள்ள ஒரு ஆலாப் பறவை (Tern) மற்றும் கங்காரூ தீவில் உள்ள ஒரு பசிபிக் கடற்பறவை (Pacific gull) ஆகியவை அடங்கும்.

கடந்த ஜூன் மாதம் முதல் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தெற்கு ஆஸ்திரேலியாவில் இதுவரை 195 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 41 சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் குறித்துத் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin