நேபாளத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

வட நேபாளத்தில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரழிவில் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 484 பேர் காணாமல் போயுள்ளதாகவும் நேபாள பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காணாமல் போனவர்களில் 391 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 93 உள்ளூர்வாசிகளும் அடங்குவர்.

காணாமல் போன வெளிநாட்டவர்களில் 134 இந்தியர்களும், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என நேபாள சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

போதே கோஷி நதிக்கரையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்திற்கு நிலநடுக்கத்தால் உருவான பனிச்சரிவே முதன்மை காரணம் என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தில் வீடுகள், சந்தைகள் மற்றும் நீர்மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை 88 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

சூழ்நிலையின் தீவிரத்தைக் கருதி அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ள பிரதமர் பாலேந்திர ஷா, மீட்புப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேபாள இராணுவம் மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, நேபாள வெள்ளப்பெருக்கு காரணமாக எல்லைப் பகுதியான இந்தியாவின் பீகார் மாநிலத்திலும் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin