வீட்டு வாடகை அதிகரிப்பு: உரிமையாளரின் கோரிக்கையைச் சட்டபூர்வமாக நிராகரிப்பது எப்படி?
வீட்டு உரிமையாளர் வாடகையை அதிகரிப்பதாகக் கடிதம் அனுப்பினால் குத்தகைதாரர்கள் (வாடகைதாரர்கள்) அச்சமடையத் தேவையில்லை. வாடகையைத் தன்னிச்சையாக அதிகரிக்கச் சட்டத்தில் இடமில்லை. இதற்கான விதிமுறைகள், காலக்கெடு மற்றும் காரணங்கள் பிரெஞ்சுச் சட்டத்தால் கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே, எந்தெந்தச் சூழ்நிலைகளில் வாடகை அதிகரிப்பைச் சட்டபூர்வமாக நிராகரிக்கலாம் என்பது குறித்த நடைமுறைகளை இங்குப் பார்ப்போம்.
வாடகை ஒப்பந்தத்தில் (Bail) ஆண்டுக் கட்டணத் திருத்தப் பிரிவு (Clause de révision annuelle) தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே, தேசியப் புள்ளியியல் நிறுவனத்தின் (Insee) வாடகை குறிப்பீட்டு குறியீட்டின் (IRL) அடிப்படையில் ஆண்டுதோறும் வாடகையை அதிகரிக்கலாம். மேலும், வீட்டில் உண்மையான வசதிகளை மேம்படுத்தும் வகையிலான திருத்தப் பணிகள் செய்யப்பட்டிருந்தாலும் அதற்கேற்ப வாடகையை உயர்த்தலாம். ஆனால், சாதாரணப் பழுதுபார்ப்புகளுக்கோ அல்லது சட்ட விதிகளுக்கு இணங்க வீட்டைச் சீரமைப்பதற்கோ வாடகையை உயர்த்த முடியாது.
சந்தை மதிப்பை விட வாடகை மிகக் குறைவாக இருந்தால், ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் போது அதனைச் சரிசெய்ய உரிமையாளருக்கு உரிமை உண்டு. ஆனால் இதற்கு, அப்பகுதியில் உள்ள மற்ற வீடுகளின் வாடகையுடன் ஒப்பிட்டுத் தகுந்த ஆதாரங்களை உரிமையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.
உரிமையாளர் கோரும் அதிகரிப்பு ‘IRL’ குறியீட்டை விட அதிகமாக இருந்தாலோ, அல்லது சாதாரணப் பழுதுபார்ப்புகளைக் காரணம் காட்டி வாடகை உயர்த்தப்பட்டாலோ அதனை வாடகைதாரர் தாராளமாக நிராகரிக்கலாம். மிக முக்கியமாக, 2024 யூலை 1-ஆம் திகதி முதல், ‘F’ அல்லது ‘G’ என ஆற்றல் திறன் தரப்படுத்தப்பட்ட (DPE) வீடுகளுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் வாடகையை உயர்த்த முடியாது. இது முற்றிலும் சட்டவிரோதமானதாகும். மேலும், வாடகை அதிகரிப்புக்கான தகுந்த ஆதாரங்களை உரிமையாளர் வழங்கத் தவறினாலும் அல்லது ஒப்பந்தம் முடிவடைய 6 மாதங்களுக்கு முன்பாக முறையான அறிவிப்பைக் கையளிக்கத் தவறினாலும் வாடகைதாரர் அதனை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.
வாடகை அதிகரிப்பை ஏற்க முடியாதெனில், உரிமையாளர் வழங்கிய ஆதாரங்களைச் சரிபார்த்த பின், ஒப்பந்தம் முடிவடைய 4 மாதங்களுக்கு முன்பாக உங்களது மறுப்பை அதற்கான காரணங்களுடன் எழுத்துப்பூர்வமாகப் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு எட்டாவிடில், மாவட்டச் சமரசக் குழுவை (CDC) அணுகலாம். இந்தச் சேவை முற்றிலும் இலவசமானதாகும். இங்கும் தீர்வு கிடைக்காவிட்டால், ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பாகவே பாதுகாப்பு மற்றும் வாடகை விவகாரங்களுக்கான நீதிபதியிடம் (Juge des contentieux de la protection) வழக்கைக் கொண்டு செல்லலாம். காலக்கெடு முடிவடைந்துவிட்டால், பழைய வாடகைத் தொகையுடனேயே ஒப்பந்தம் தானாகவே புதுப்பிக்கப்பட்டுவிடும்.
வீட்டுப்பற்றாக்குறை உள்ள நெருக்கடியான பகுதிகளில் சந்தை மதிப்பைச் சரிகட்ட வாடகை உயர்த்தப்பட்டால், அதற்கும் கடுமையான உச்சவரம்பு உண்டு. சந்தை வாடகைக்கும் தற்போதைய வாடகைக்கும் இடையிலான வித்தியாசத்தில் 50 விழுக்காடு மட்டுமே அதிகரிக்கப்படலாம்.
அல்லது, வீட்டில் செய்யப்பட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கான செலவில் 15 விழுக்காடு வரையே வாடகையை உயர்த்த முடியும்.
இந்த அதிகரிப்பும் ஒரே தவணையாக அன்றி, புதிய ஒப்பந்தக் காலத்தைப் பொறுத்துப் படிப்படியாகவே (Par tiers ou par sixième) நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

