பெல்ஜியத்தில் சோகம்: ஐந்து வயதுச் சிறுவன் டைமோ மற்றும் அவனது தந்தையின் உடல்கள் மீட்பு!
பெல்ஜியத்தின் தெற்குப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் இறுதியில் காணாமல் போன ஐந்து வயதுச் சிறுவன் டைமோ (Tyméo) மற்றும் அவனது தந்தை பிரையன் பிரிவூ (Bryan Brigou) ஆகியோருடையது எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு உடல்களைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
பெல்ஜியத்தின் ஓன்ஹாய் (Onhaye) பகுதியில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குப் பிறகு, அதற்குச் சில பத்து மீட்டர் தொலைவில் தந்தையின் உடலும் செவ்வாய்க்கிழமை (இன்று) மீட்கப்பட்டுள்ளது. உடல்களை அடையாளம் காணும் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் இன்னும் முழுமை பெறவில்லை என்றாலும், அவை காணாமல் போன தந்தை மற்றும் மகனின் உடல்களாக இருக்கலாம் என நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த உடற்கூறாய்வு (Autopsie) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜூன் 27-ஆம் திகதி ஓன்ஹாய் பகுதியில் கடைசியாகக் காணப்பட்ட இவர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். முன்னதாக, அவர்களது வாகனம் ஆளில்லாத நிலையில் அதே பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. சிறுவனைக் தந்தை கடத்திச் சென்றிருக்கலாமா என்ற கோணம் உட்பட அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

