இலங்கையின் வடமேற்கு கடற்பரப்பில் அமைந்துள்ள மன்னார் படுகையில் பெருமளவிலான பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய வளங்கள் மேம்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், மன்னார் படுகையில் சுமார் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும், 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
🌊 சர்வதேச முதலீட்டாளர்களுக்கு 4 கடல்சார் தொகுதிகள்
மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை மேலதிகமாக ஆய்வு செய்வதற்காக, இலங்கை தனது வடமேற்கு கடற்பரப்பில் உள்ள நான்கு கடல்சார் ஆய்வுத் தொகுதிகளை சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பெரிய பரப்பளவில் இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால், நவீன புவிசார் ஆய்வுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய தரவுகளை சேகரிக்கவும், அவற்றை விரிவாக ஆராயவும் சர்வதேச நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மன்னார் படுகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இயற்கை எரிவாயு மற்றும் திரவங்கள் கண்டறியப்பட்டதன் மூலம் அங்கு பெட்ரோலிய அமைப்பு இருப்பதற்கான சான்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🇱🇰 எரிபொருள் இறக்குமதிக்கு மாற்றாக அமையுமா?
இதேவேளை, இந்த வளங்கள் வணிக ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்படும் பட்சத்தில், இலங்கை எதிர்நோக்கும் எரிபொருள் இறக்குமதி சார்பைக் குறைப்பதற்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாக அமையக்கூடும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு தேவைக்கு மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் எரிபொருளை எதிர்காலத்தில் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டும் வாய்ப்பும் உருவாகலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
📍 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவு
இந்த முதலீட்டு அழைப்புக்காக மன்னார் படுகையில் சுமார் 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் சில முன்னர் சட்டரீதியான சிக்கல்கள் காரணமாக நிறுவனங்களுக்கு வழங்கப்படாத இடங்கள் தற்போதைய ஒதுக்கீட்டில் சேர்க்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், தற்போது வெளியிடப்பட்டுள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அளவுகள் ஆய்வுகளின் அடிப்படையிலான மதிப்பீடுகளாகும். முழுமையான ஆய்வு, கண்டுபிடிப்பு மற்றும் வணிக ரீதியான உற்பத்திக்குப் பின்னரே உண்மையான கையிருப்பு மற்றும் பொருளாதார மதிப்பு உறுதியாகும்.

