ஹோர்முஸ் நீரிணையை தன்வசமாக்கும் அமெரிக்கா? – ட்ரம்பின் பதிவால் அதிர்ச்சி
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் புதிய பகுதியாகக் காட்டும் வரைபடத்தை Truth Social சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.
அங்கு அமெரிக்காவின் அரசுரிமையை நிலைநாட்டப்போவதாக முன்பு கூறிய கருத்தை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். டிரம்ப்பின் கருத்தை ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி மோஸன் ரேஸாய் கேலி செய்திருக்கிறார்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கச் செய்வதில் அமெரிக்காவின் இயலாமையை அவர் சுட்டினார். அது தனக்குச் சொந்தம் என்று அமெரிக்கா சொல்வதில் ஒரு தொடர்பும் இல்லை என்றார் அவர்.
வாஷிங்டனுக்கும், ஹோர்முஸ் நீரிணைக்கும் இடையிலான தூரம் சுமார் 11,000 கிலோமீட்டர். அது போல டிரம்ப் சொல்வது ஒன்றுக்கு ஒன்று எட்டாதது என்று கேலியாக அவர் குறிப்பிட்டார்.
தனது நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கப்போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக இருக்கிறது.
தனது துறைமுகங்கள் மீது அமெரிக்காவின் முற்றுகையை அகற்றுவது, எண்ணெய் வர்த்தகத்துக்கான தடைகளை நீக்குவது, முடக்கப்பட்டுள்ள ஈரானியச் சொத்துகளை விடுவிப்பது, போரில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்திருக்கிறது.

