பிரான்சில் காய்கறி பழங்களின் விலை சடுதியாக உயர்வு

பிரான்ஸில் கோடை வெப்ப அலை – கடுமையாக உயர்ந்த காய்கறி மற்றும் பழங்களின் விலையால் திணறும் பொதுமக்கள்!

பிரான்சில் நிலவும் தொடர் வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளும் நுகர்வோரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

நுகட்டோர் குழுவான கிராமப்புற குடும்பங்கள் அமைப்பின் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சுரைக்காய் விலை 32%, தக்காளி விலை 31% மற்றும் பச்சை பயறு அல்லது பீன்ஸ் விலை 24% வரை உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வானது நடப்பாண்டில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய அதிகரிப்புகளில் ஒன்றாகும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

மேலும், 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது புதிய பழங்களின் விலை 54% அதிகரித்துள்ளதாகவும், புதிய காய்கறிகளின் விலை 62% அதிகரித்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

“பொது சுகாதார பரிந்துரைகளின் மையமாக இருக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள், தற்போது மிக வேகமாக விலை உயரும் உணவுப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டன” என்று நுகர்வோர் குழு கவலை தெரிவித்துள்ளது.

வேளாண்மை அமைச்சகத்தின் புள்ளிவிவர சேவையான Agreste இன் கூற்றுப்படி, அக்விடேன் பிராந்தியத்தில் வெப்ப அலை பழங்களின் வளர்ச்சியை மந்தமாக்கியுள்ளதாகவும், வெளிப்படும் ஆப்பிள்களில் கருகல் ஏற்பட்டுள்ளதாகவும், உள்ளூர் உற்பத்தி 5% முதல் 15% வரை இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர வெப்பத்தால் ஸ்ட்ராபெர்ரி மற்றும் தக்காளிப் பயிர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சில பகுதிகளில் இந்த பாதிப்பு இன்னும் தீவிரமாக உள்ளது. Aveyron பகுதியில் உள்ள காய்கறி விவசாயி ஒருவர், வெப்பத்தால் சேதமடைந்த மிளகாய், கீரை மற்றும் சுரைக்காய் போன்றவற்றை குப்பையில் வீச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.

அவர் அறுவடை செய்த 400 கிலோ பச்சைப் பயிர்களில், வெறும் 10 கிலோவை மட்டுமே தன்னால் காப்பாற்ற முடிந்தது.

Loire-Atlantique பகுதியில் உள்ள மற்றொரு ஆப்பிள் விவசாயி, வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக சில ஆப்பிள்களின் அளவு

“மூன்றில் ஒன்றாகக் குறைந்துவிட்டதாக செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அந்தத் தோட்டத்தில் சுமார் 75% உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மதிப்பிட்டுள்ளார்.

தீவிர வானிலை காரணமாக ஆப்பிள், தக்காளி, சுரைக்காய், பச்சைப் பயறு, மிளகாய், கீரை போன்ற பல காய்கறிகளுடன், பீச் மற்றும் ஆப்ரிகாட் போன்ற கோடைகாலப் பழங்களும் இதே போன்ற பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.

வெப்பத்தால் சேதமடைந்த விளைபொருட்கள் விற்பனைக்கு உதவாமல் போவதுடன் விரைவில் அழுகிவிடுகின்றன; இது விவசாயிகளுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்து, விலையேற்றத்திற்கும் காரணமாகிறது.

வெப்ப அலைகளில் விவசாயிகளுக்கு அதிக தண்ணீர் தேவைப்பட்டாலும், வறட்சி காரணமாக விதிக்கப்படும் கடுமையான நீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் நிலைமையை மேலும் கடினமாக்குகின்றன.

சில விவசாயிகள் தங்களால் இயன்றவரை நீர்ப்பாசனம் செய்தல், புதிய வகைகளைப் பயிரிடுதல் மற்றும் வளர்ப்பு முறைகளை மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்;

எனினும், தீவிர வெப்பம், வறட்சி மற்றும் உயர்ந்துவரும் உற்பத்திச் செலவுகள் காரணமாக இந்த உடனடி நெருக்கடிகளை முழுமையாகத் தவிர்க்க முடியவில்லை

Recommended For You

About the Author: admin