பிரான்சில் 2027 ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் தலையீட்டைத் தடுக்க புதிய சட்டம்!
பிரான்சில் 2027 ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, வெளிநாட்டு தலையீடுகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகப் பரவும் தவறான தகவல்களைத் தடுக்கும் நோக்கில் அரசு புதிய சட்டமூலத்தைத் தயாரித்துள்ளது.
இந்தச் சட்டமூலத்தை உள்துறை அமைச்சர் லோரான் நூன்யெஸ் (Laurent Nuñez) அறிமுகப்படுத்தியுள்ளார்.
புதிய சட்டத்தின்படி, தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் வகையில் திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்புவது,
வெளிநாட்டு அமைப்புகள் அல்லது அரசுகளின் மறைமுக நிதியுதவியுடன் தேர்தலில் தலையிடுவது போன்ற செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.
மேலும், தேர்தல் காலத்தில் இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்கள் சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கங்களை விரைவாகக் கண்டறிந்து அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டிய பொறுப்பும் அதிகரிக்கப்படும்.
உக்ரைன் போர், இணையத் தாக்குதல்கள் மற்றும் ஐரோப்பாவில் அதிகரித்து வரும் தவறான தகவல்
பரப்புரைகளை கருத்தில் கொண்டு, பிரான்சின் ஜனநாயகத் தேர்தல் முறையைப் பாதுகாப்பதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் என அரசு தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

