அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு, 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் சிலரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் ஹேவன் (Grand Haven Township) பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டின் தீ விபத்து குறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்பு மற்றும் காவல் துறையினர், வீட்டிற்குள் சோதனை நடத்திய போது இந்த சடலங்களைக் கண்டெடுத்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவர்களின் வயது 5 முதல் 15 க்குள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் வசித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், இச்சம்பவம் ஒரு “கொலை மற்றும் தற்கொலை” (murder-suicide) சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த தீ விபத்து திட்டமிட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

