அழகை இழக்கின்றதா நுவரெலியா? : கண்டவாறு நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள்

நுவரெலியா மாநகர சபை எல்லைக்குள் இடம்பெறும் சட்டவிரோத கட்டிட நிர்மாணங்களுக்கு எதிராக சட்டம் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சி நகரசபை உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆளும் தரப்பைச் சேர்ந்த சில நகரசபை உறுப்பினர்களின் தலையீடுகள் மற்றும் சில அதிகாரிகளின் முறைகேடுகள் காரணமாக சட்டவிரோத நிர்மாணங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுமாறு அறிவிப்புகள் விடுக்கப்பட்டும், பல வாரங்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி, எந்தவித அரசியல் தலையீடும் இன்றி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.

இதனிடையே, எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வனிகசேகர, 2010ஆம் ஆண்டு முதல் நுவரெலியா நகர எல்லைக்குள் இடம்பெற்ற சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பான ஆவணங்கள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சமீபத்திய சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் எந்தத் தரப்பினராயினும் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நன்றி- சிங்கள ஊடகம்

Recommended For You

About the Author: admin