அழிந்து போகும் வாகனங்கள்: பெறுமதி கோடிக்கணக்கில்- என்ன நடக்கின்றது?

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தகவல்களின்படி, இறக்குமதியாளர்களால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் ஆயிரம் சொகுசு மோட்டார் வாகனங்கள், துறைமுகத்தில் விதிக்கப்படும் அதிகளவான தாமதக் கட்டணத்தை (Demurrage Charges) செலுத்த முடியாத காரணத்தால், ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திலேயே அகற்றப்படாமல் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இந்த வாகனங்களில் பெருமளவானவை தற்போது சேதமடைந்து அழுகிய நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சுமார் 40,000 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மீள் ஏற்றுமதிக்காக கொண்டு வரப்பட்டவையாகும்.

மேலும், போர் நிலைமை காரணமாக துபாய் உள்ளிட்ட வெளிநாட்டு இலக்குகளுக்கு அனுப்ப முடியாமல் தற்காலிகமாக இறக்கப்பட்ட வாகனங்களும் இதில் அடங்குகின்றன.

மீள் ஏற்றுமதிக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் உட்பட, இந்த அனைத்து வாகனங்களும் அநியாயமான தாமதக் கட்டணப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்த உள்ளூர் இறக்குமதியாளர் ஒருவர், அண்மையில் அந்த வாகனத்தை துறைமுகத்திலிருந்து வெளியேற்ற முயன்றபோது, கிட்டத்தட்ட 50 மில்லியன் ரூபாய் தாமதக் கட்டணம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், அந்த வாகனத்தின் மொத்தச் செலவு 70 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அதன் ஆரம்ப பெறுமதியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.

அதிகளவான தாமதக் கட்டணம் விதிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த இறக்குமதியாளர், இது தொடர்பில் சுங்கத் திணைக்களத்திற்கு அறிவித்ததுடன், மிகப்பெரிய செலவு காரணமாக அந்த வாகனத்தை துறைமுகத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை முற்றாக கைவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக நடவடிக்கைகள் சீன நிறுவனம் ஒன்றின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னரே இவ்வாறான பாரதூரமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற நிலைமையை எதிர்கொண்டுள்ள பெருமளவான வாகனங்கள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட வரிகள் மற்றும் கட்டணங்களைச் செலுத்த முடியாத காரணத்தால் பல இறக்குமதியாளர்கள் தங்களது வாகனங்களை கைவிட்டுள்ளதாகவும், இதனால் அவை சேதமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வினவியபோது, சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா, இந்த நிலைமை குறித்து சுங்கத் திணைக்களம் முழுமையாக அறிந்துள்ளதாகவும், பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாகத்துடன் தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், குறித்த மோட்டார் வாகனம் சீன நிறுவனம் துறைமுக நிர்வாகத்தை பொறுப்பேற்கும் முன்னரே இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும், நாளாந்தம் தொடர்ந்து அதிகரித்த தாமதக் கட்டணங்களின் காரணமாகவே இவ்வளவு பெரிய தொகை குவிந்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்

Recommended For You

About the Author: admin