ஸ்பெயின் – அர்ஜென்டினா (1-0): 2-ஆவது உலகக் கோப்பையை முத்தமிட்டது ஸ்பெயின் (Espagne)…
மகுடத்தை இழந்தது மெஸ்ஸியின் (Messi) அர்ஜென்டினா!
(ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 19) நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப்போட்டியில்,
அர்ஜென்டினா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் (La Roja), தனது கால்பந்து வரலாற்றில் 2-ஆவது முறையாக உலகக் கோப்பையை (Deuxième Coupe du monde) வென்று மாபெரும் சரித்திரம் படைத்துள்ளது.
உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த இறுதிப்போட்டி, ஒரு கொ லிவுட் திரைப்படத்தை மிஞ்சும் விறுவிறுப்புடன் அரங்கேறி முடிந்துள்ளது.
நடுவரின் முதல் விசில் சத்தம் ஒலித்த மறுகணமே ஆடுகளத்தில் அனல் பறக்கத் தொடங்கியது. தொடக்கம் முதலே ஆட்டம் ஸ்பெயின் அணியின் முழுக் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
ஸ்பெயின் வீரர்கள் தங்களுக்குள் மிக நேர்த்தியாகப் பந்தைப் பரிமாறிக்கொண்ட விதம் பார்வையாளர்களைச் சிலிர்க்க வைத்தது.
பந்து பெரும்பாலும் ஸ்பெயின் வீரர்களின் கால்களிலேயே ஒட்டிக்கொண்டிருந்தது. லாமின் யமால் (Lamine Yamal) பந்தைக் கால்களில் தவழவிட்டபடி அர்ஜென்டினாவின் தடுப்பு அரணை ஊடுருவிச் சென்ற ஒவ்வொரு முறையும் அரங்கத்தில் “அடடே..!” என்ற வியப்பொலி விண்ணைப் பிளந்தது.
ஸ்பெயினின் மின்னல் வேகத் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமலும், பந்தைத் தங்கள் வசம் கொண்டுவர முடியாமலும் அர்ஜென்டினா வீரர்கள் கடும் விரக்தியடைந்தனர்.
அதன் விளைவாக, தங்களின் புகழ்பெற்ற கால்பந்து நுணுக்கங்களை விட்டுவிட்டு, முரட்டுத்தனமான உடல்ரீதியான தாக்குதல்களில் இறங்கினர்.
ஸ்பெயின் வீரர்களைக் கீழே தள்ளிவிடுவது, கால்களில் ஓங்கி உதைப்பது என அர்ஜென்டினாவின் ஆட்டம் வன்முறையாக மாறியது.
இளம் வீரர் லாமின் யமாலைக் குறிவைத்து அவர்கள் நடத்திய முரட்டுத் தாக்குதல்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தன. நடுவர் பலமுறை எச்சரித்தும் அர்ஜென்டினாவின் முரட்டுத்தனம் குறையவில்லை.
ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயின் அணி பலமுறை கோல் அடிக்கும் வாய்ப்பை நெருங்கியது.
பெனால்டி எல்லைக்கு வெளியே இருந்து ஒரு ஸ்பெயின் வீரர் அடித்த அதி வேகப் பந்து, கோல் கம்பத்தில் பட்டுத் தெறித்தபோது ஒட்டுமொத்த மைதானமும் ஒரு கணம் உறைந்து போனது.
மறுபுறம், ஒரு கட்டத்தில் பந்தைப் பெற்ற லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), தனது மாயாஜாலக் கால்களால் மூன்று ஸ்பெயின் வீரர்களை ஏமாற்றி முன்னேறிய தருணம் மெய்சிலிர்க்க வைத்தது.
ஆனால், ஸ்பெயினின் இரும்புத் தடுப்பு அரண் அவரை இறுதிவரை கோல் அடிக்க விடாமல் முறியடித்தது.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், போட்டி கூடுதல் நேரத்திற்குச் (Prolongation) சென்றது
. நேரம் செல்லச் செல்ல அர்ஜென்டினா வீரர்களின் முரட்டுத்தனம் எல்லை மீறியது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில், ஸ்பெயின் வீரரை மிகக் கொடூரமாகத் தாக்கியதற்காக அர்ஜென்டினா வீரர் ஒருவருக்கு நடுவர் ‘சிவப்பு அட்டை’ கொடுத்து வெளியேற்றினார்.
10 வீரர்களாகச் சுருங்கிய அர்ஜென்டினா அணி பெரும் நெருக்கடிக்கு உள்ளானது.
கூடுதல் நேரத்தின் இறுதிப் பகுதி… இரு அணிகளும் சமநிலையில் இருந்த அந்த உச்சக்கட்டப் பதற்றமான நேரத்தில், பெர்ரான் டோரஸ் பந்தை மின்னல் வேகத்தில் கடத்திச் சென்று, அர்ஜென்டினாவின் கோல்கீப்பரைத் திறமையாக ஏமாற்றி வலையினுள் புகுத்தினார்.
கோல்…! மைதானத்தில் இருந்த ஸ்பெயின் ரசிகர்கள் மகிழ்ச்சிக் கடலில் துள்ளிக் குதித்தனர்.
இறுதி விசில் ஊதப்பட்டதும், ஸ்பெயின் வீரர்கள் ஆனந்தக் கண்ணீருடன் மைதானத்தில் கட்டித்தழுவிக் கொள்ள, மறுபுறம் தனது உலகக் கோப்பை மகுடத்தைப் பறிகொடுத்த லியோனல் மெஸ்ஸி தலையைக் குனிந்தபடி மைதானத்தை விட்டு வெளியேறிய காட்சி வரலாற்றில் நீங்காத இடம்பிடித்தது.
இந்த வெற்றியின் மூலம், ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரமான லாமின் யமால், யூரோ கோப்பை (Euro) மற்றும் உலகக் கோப்பை (Coupe du monde) ஆகிய இரண்டையும் அடுத்தடுத்து
வென்ற உலகக் கால்பந்து வரலாற்றின் மிகக் குறைந்த வயதுடைய வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

