காணொளி மருத்துவ ஆலோசனைகளில் (Téléconsultations) அமலுக்கு வந்த அதிரடி மாற்றங்கள்!
பிரான்சில் காணொளி வழியான மருத்துவ ஆலோசனைகள் (téléconsultations) மூலம் போலியாக மருத்துவ விடுப்பு (arrêt maladie) பெறுவதைத் தடுக்கும் நோக்கில் அரசு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம், இனி வீட்டில் இருந்தபடியே நீண்ட நாட்களுக்கு எளிதாக மருத்துவ விடுப்பு வாங்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 25, 2026 அன்று அரசு இயற்றியுள்ள புதிய ‘மோசடித் தடுப்புச் சட்டத்தின்’ (loi antifraude) படி, இனி காணொளி மருத்துவ ஆலோசனை மூலம் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு மட்டுமே மருத்துவ விடுப்புச் சான்றிதழ் பெற முடியும்.
மூன்று நாட்களுக்கு மேல் உங்களுக்கு விடுப்பு தேவையென்றால், நீங்கள் கட்டாயம் மருத்துவரை நேரில் சென்று சந்திக்க வேண்டும் என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்தக் கடுமையான விதிகளிலிருந்து சில குறிப்பிட்ட சூழல்களுக்கு மட்டும் அரசு விலக்கு அளித்துள்ளது:
உங்களின் அதிகாரப்பூர்வ குடும்ப மருத்துவரோ (médecin traitant) அல்லது உங்களைக் கண்காணிக்கும் மகப்பேறு மருத்துவச்சியோ (sage-femme référente) காணொளி மூலம் பரிசோதித்தால், அவர்கள் மூன்று நாட்களுக்கு மேலான விடுப்பை வழங்க முடியும்.
உடல்நலக்குறைவால் நேரில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கும் இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக Service Public இணையதளம் தெரிவித்துள்ளது.
2026-ஆம் ஆண்டிற்கான சமூகப் பாதுகாப்பு நிதி மசோதாவின் (PLFSS) கீழ் மேலும் சில அதிரடிக் கட்டுப்பாடுகளும் அமலுக்கு வரவுள்ளன.
அதன்படி, வருகிற செப்டம்பர் 1-ஆம் திகதி முதல், ஒருவருக்கு முதல் முறையாக வழங்கப்படும் மருத்துவ விடுப்புத் தொடர்ந்து 31 நாட்களைத் தாண்டக் கூடாது. அதேபோல, அந்த விடுப்பை நீட்டிக்கும் காலவரம்பும் அதிகபட்சம் 62 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தப்புதிய கட்டுப்பாடுகள் வந்தாலும், சான்றிதழைச் சமர்ப்பிக்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போலவே,
பணியாளர்கள் தங்களின் மருத்துவ விடுப்புச் சான்றிதழை 48 மணி நேரத்திற்குள் தங்களின் நிறுவனத்திற்கும், மருத்துவக் காப்பீட்டு ஆணையத்திற்கும் (caisse d’assurance maladie) அனுப்பிவிட வேண்டும்.
பணியாளரின் விடுப்பு குறித்துச் சந்தேகம் எழுந்தால், நிறுவனம் நேரடியாக நோயாளியின் வீட்டிற்குச் சென்றோ அல்லது வேறொரு மருத்துவர் மூலமாகவோ மறுபரிசோதனை (contre-visite) செய்ய முழு உரிமை உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, போலியான மருத்துவ விடுப்புச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது நிரூபிக்கப்பட்டால்,
அது வேலையிலிருந்து நீக்கப்படுவதற்கான காரணம் மட்டுமன்றி, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 75,000 யூரோக்கள் வரை அபராதமும் விதிக்கப்படக்கூடிய மிகப்பெரிய குற்றமாகும் என அரசு மிகக் கடுமையாக எச்சரித்துள்ளது.

