பரந்தன் – வவுனியா பேருந்தின் விசித்திரப் பயணம்: பயணிகள் கடும் அவதி; சாரதி, நடத்துனருக்கு 7 நாட்கள் பணித்தடை மற்றும் தண்டப்பணம் விதிப்பு!
பரந்தனில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று, பயணிகளை அலைக்கழித்து, கூடுதல் கட்டணம் வசூலித்ததோடு தகாத வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில், குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருக்கு 7 நாட்கள் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
பரந்தனில் இருந்து வவுனியா நோக்கிப் புறப்பட்ட NP 7487 இலக்கமுடைய தனியார் பேருந்து, காலை 09:20 மணிக்கு கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து காலை 09:30 மணிக்கு வவுனியா நோக்கிப் பயணிக்க வேண்டிய இப்பேருந்து, திட்டமிட்டபடி பயணிக்காமல் திடீரென மீண்டும் பரந்தன் நோக்கியே திரும்பிச் சென்றுள்ளது.
பரந்தனுக்குச் சென்று மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு, மறுபடி கிளிநொச்சிக்கு வந்து, அங்கிருந்து வவுனியாவை வந்தடைந்த போது மதியம் 12:15 மணி ஆகி இருந்தது. பேருந்தின் இந்தத் தன்னிச்சையான பின்னோக்கிய பயணத்தால், பயணிகள் சுமார் மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் தாமதமாகவே வவுனியாவை வந்தடைந்தனர்.
இதனால் பயணிகள் அனைவரும் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
காலதாமதம் மட்டுமன்றி, பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பேருந்துக் கட்டணச் சீட்டில் (Ticket) 300 ரூபாய் என அச்சிடப்பட்டிருந்த போதிலும், பயணிகளிடம் இருந்து தலா 330 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி மேலதிகமாக 30 ரூபாய் வசூலிக்கப்பட்டமை மற்றும் பேருந்தில் பயணிகளிடம் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு அநாகரிகமாக நடந்துகொண்டமை ஆகியவை பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இவ்விடயம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட வவுனியா பயணிகளால் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இம்முறைப்பாட்டை அடுத்து, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் அவர்கள் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டார்.
விசாரணையின் அடிப்படையில் தகாத வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்த குற்றச்சாட்டுகளுக்காகவும் விதிமுறைகளை மீறி தன்னிச்சையாகச் செயற்பட்ட குற்றத்திற்காகவும் குறித்த பேருந்தின் சாரதியும் உரிமையாளருமான நபருக்கும், அதன் நடத்துனருக்கும் ஏழு நாட்கள் (7 Days) பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ரபயணிகளிடம் அதிகளவு கட்டணம் வசூலித்தமைக்கு அவர்களுக்கு தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிளிநொச்சியிலிருந்து வவுனியா வரை செல்வதற்கு அனுமதிப் பத்திரம் (Route Permit) பெற்றிருந்தும், அதற்கு முரணாக பரந்தன் நோக்கித் திரும்பியமை நிரூபிக்கப்பட்டதை அடுத்து புதிய கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றிலிருந்து கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் இப்பேருந்தானது, வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை நோக்கி மட்டுமே நேராகச் செல்ல வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முறையான நேர முகாமைத்துவம் இன்றியும், பயணச்சீட்டு விதிகளுக்கு முரணாகவும் செயற்படும் பேருந்து நிர்வாகங்களுக்கு எதிராக இவ்வாறான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

