யாழ்ப்பாணம் – கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், நீதி மற்றும் அபிவிருத்தி குறித்து விசேட சந்திப்பு
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், நீதி, வாழ்வாதார மேம்பாடு மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் 01.07.2026 அன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், மீன்பிடி மற்றும் கடலியல்வள அமைச்சருமான கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் (பா.உ.) அவர்களுக்கும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள், உள்ளூர் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபடும் தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்குமிடையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பை பெண்கள் அபிவிருத்தி மையத்தின் பிரதம நிர்வாகி ஜனாபா சியானா நியாஸ் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
கலந்துரையாடலில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்கள் பல தசாப்தங்களாக எதிர்கொண்ட இடம்பெயர்வு, சொத்து இழப்புகள், வாழ்வாதார பாதிப்புகள் மற்றும் சமூகச் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மீள்குடியேற்றம் என்பது வெறுமனே மீண்டும் குடியேறுவதைக் குறிக்காது; அது நீதி, கண்ணியம், பொருளாதார மீளுருவாக்கம், அரசியல் பங்கேற்பு மற்றும் கலாச்சார அடையாளப் பாதுகாப்பை உள்ளடக்கிய முழுமையான செயல்முறை என வலியுறுத்தப்பட்டது.
இதன்போது, மீள்குடியேற்றம், வீடமைப்பு, வாழ்வாதார மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான அரசுத் திட்டங்களை கண்காணிப்பதற்கான சமூக அடிப்படையிலான பொறிமுறையை உருவாக்குதல், அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
எதிர்கால அபிவிருத்தி மற்றும் கொள்கைத் தீர்மானங்களில் சமூகத்தின் அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதி செய்வது, பெண்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அரசியல் தீர்வு தொடர்பில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற கட்டாய வெளியேற்றம், உயிரிழப்புகள், சொத்து இழப்புகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகள், இழப்பீடு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் போன்றவை எதிர்கால அரசியல் தீர்வு மற்றும் மாற்றுக் கால நீதிசார் செயல்முறைகளில் உள்ளடக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி தொடர்பில், யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரமான வர்த்தகத்தை மையப்படுத்திய அபிவிருத்தித் திட்டங்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான ஆதரவு, இளைஞர் தொழில்முனைவு, பெண்கள் தலைமையிலான வருமான உருவாக்கத் திட்டங்கள், மீன்பிடி, விவசாயம் மற்றும் சேவைத் துறைகளின் மேம்பாடு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதேவேளை கல்வி அபிவிருத்தி, தொழிற்கல்வி, தகவல் தொழில்நுட்பப் பயிற்சிகள், உயர்கல்வி வாய்ப்புகள், காணி உரிமைப் பிரச்சினைகள், வீடமைப்பு, குடிநீர், மின்சாரம், சுகாதாரம், வீதிகள் மற்றும் ஏனைய அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், பள்ளிவாசல்கள், கபரஸ்தான்கள், வரலாற்று இடங்கள் மற்றும் கலாச்சார மரபுகளைப் பேணிப் பாதுகாப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இச்சந்திப்பின் போது யாழ் மாநகரசபை உறுப்பினர் என். எம். அப்துல்லாஹ் அவர்கள், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் அந்த மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முஸ்லிம் பிரதிநிதியொருவர் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கையொன்றை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர், குறித்த கோரிக்கை தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், இவ்வாறான கிராம மட்ட மற்றும் சமூக அடிப்படையிலான சந்திப்புகள் தொடர்ச்சியாக நடத்தப்படுவதன் மூலம் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற நிலைமைகள் மற்றும் தேவைகள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ள முடியும் எனவும், அதற்கான தனது இணக்கப்பாட்டை அமைச்சர் வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு. அகிலன் கதிர்காமர் அவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சந்திப்பின் இறுதியில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், நீதி, அபிவிருத்தி மற்றும் அரசியல் பங்கேற்பு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்று முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளினால் கௌரவ அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் என்பது ஒரு மனிதாபிமான அல்லது அபிவிருத்தி விவகாரம் மட்டுமல்ல; அது நீதி, சமத்துவம், கண்ணியம் மற்றும் நிலையான சமாதானத்துடன் தொடர்புடைய சமூக மற்றும் அரசியல் பொறுப்பாகும் என்ற புரிதலை மேலும் வலுப்படுத்திய ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது.

