2026 ஜூலை முதல் பிரான்சில் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்: நீங்கள் அறிய வேண்டியவை!

ஜூலை 2026, பிரான்சு மக்களுக்கு நிர்வாக மற்றும் சமூக ரீதியில் பல புதிய சட்டங்களையும் விதிமுறைகளையும் கொண்டுவருகிறது. குடும்பங்கள், மாணவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சிறு தொழில்முனைவோர் எனப் பல தரப்பினரையும் நேரடியாகப் பாதிக்கவுள்ள இந்த மாற்றங்களின் முழுமையான தொகுப்பு இதோ:

புதிய ‘பிறப்பு விடுப்பு’ (Congé de naissance) ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. தற்போதுள்ள பேறுகால மற்றும் தந்தைவழி விடுப்புகளுக்குக் கூடுதலாக இது வழங்கப்படும். பெற்றோர் ஒவ்வொருவருக்கும் தலா 1 முதல் 2 மாதங்கள் வரை ஊதியத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும்.

ஒருவருக்கான விடுப்பை மற்றொருவருக்கு மாற்ற முடியாது. முதல் மாதம் 70 விழுக்காடு ஊதியமும், இரண்டாம் மாதம் 60 விழுக்காடு ஊதியமும் வழங்கப்படும். குழந்தை பிறந்து 9 மாதங்களுக்குள் இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எரிவாயு (Gaz) விலை உயர்வு

சர்வதேசச் சந்தை நிலவரம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக, ஜூலை 1 முதல் எரிவாயு விலை 7.4 விழுக்காடு அதிகரிக்கிறது.

இதன்மூலம், நுகர்வோருக்கு மாதத்திற்குச் சராசரியாக 2.70 யூரோக்கள் வரை கூடுதல் கட்டணச் சுமை ஏற்படும்.
மீண்டும் வரும் மலிவுவிலை மின்வாகனத் திட்டம் (Leasing social)

தொடக்கம்:

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான மலிவுவிலை மின்வாகன வாடகைத் திட்டம் ஜூலை 16 முதல் மூன்றாம் கட்டமாக மீண்டும் தொடங்குகிறது.தனி நபருக்கான வரிவிதிப்பு வருமானம் 16,300 யூரோக்களுக்குக் கீழ் உள்ளவர்கள் மற்றும் வேலைக்காக நாள்தோறும் 15 கிலோமீட்டருக்கும் மேல் பயணிப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எ

வ்வித முன்பணமுமின்றி, மாதம் 200 யூரோக்களுக்கும் குறைவான வாடகையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு மின்வாகனங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

வெளிநாட்டு மாணவர்களுக்கான வீட்டுவசதி உதவித்தொகை (APL) நீக்கம்!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (Union européenne) வெளியிலிருந்து பிரான்சிற்குப் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களில், CROUS கல்வி உதவித்தொகை பெறாதவர்களுக்கு ஜூலை 1 ம் திகதி முதல் APL எனப்படும் வீட்டுவசதி உதவித்தொகை ரத்து செய்யப்படுகிறது.

சுமார் 3 இலட்சம் வெளிநாட்டு மாணவர்களை இது பாதிக்கக்கூடும். எனினும், பகுதிநேர வேலை அல்லது தொழிற்பயிற்சி (Apprentissage) செய்யும் மாணவர்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சிறு தொழில்முனைவோருக்கான சலுகைக் குறைப்பு

புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு வழங்கப்படும் ACRE திட்டத்தின் கீழான சமூகப் பங்களிப்பு (Cotisations sociales) விலக்கு, ஜூலை 1 முதல் 50 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது.

இதர முக்கிய மாற்றங்கள் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான காலக்கெடு எளிமையாக்கப்பட்டுள்ளது.

இனி இணையம் அல்லது நகரசபை என எதன் மூலமாகப் பதிவு செய்தாலும், தேர்தலுக்கு முந்தைய 6-ஆவது வெள்ளிக்கிழமை கடைசி நாளாகக் கருதப்படும்.

பர்கூர்சுப் (Parcoursup) உதவித்தொகை: தங்கள் வசிப்பிட மண்டலத்தைத் தாண்டி (Hors académie) வெளியூர்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு, ஜூலை 15 முதல் 500 யூரோக்கள் நகர்வு உதவித்தொகையாக வழங்கப்படும்.

வரி திரும்பப்பெறல் (Remboursement d’impôts): 2025 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட வருமான வரியில் அதிகப்படியாகப் பிடிக்கப்பட்ட தொகைகள், ஜூலை 25 அல்லது ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் பொதுமக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகத் திருப்பி அனுப்பப்படும்.

Recommended For You

About the Author: admin