புத்தளம் கண்டல்குடா கடற்கரையில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு கைவிடப்பட்ட சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றல்
கண்டல்குடா கடற்கரையோரத்தில் விமானப்படை தள எல்லைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சவக்காரம், செம்போ மற்றும் கட்டி மஞ்சள் அடங்கிய சுமார் 27 மூடைகளை கற்பிட்டி பொலிஸார் இன்று (17) விசேட சுற்றிவளைப்பில் கைப்பற்றியுள்ளனர்.
கற்பிட்டி பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொறுப்பதிகாரி கபில பிரேமதாசவின் வழிக்காட்டலின் கீழ், எஸ்.எஸ். பண்டார தலைமையிலான விசேட குற்றத் தடுப்பு பொலிஸ் குழுவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில், கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பொருட்களின் சரியான எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


