இலங்கையின் பிரதான சர்வதேச நுழைவாயிலான கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையத்தை முற்றிலும் நவீனமயமாக்குவதற்கான பிரம்மாண்ட திட்டத்தை இலங்கை அரசாங்கம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஆகச்சிறந்த சிறப்பம்சம் என்னவென்றால், எந்தவொரு வெளிநாட்டுக் கடன்களையும் நம்பியிருக்காமல், 15 பில்லியன் ரூபா (சுமார் 1,500 கோடி) உள்நாட்டு அரச நிதியைக் கொண்டே (மக்கள் வரிப்பணம் மட்டுமே) இந்த மேம்பாட்டுப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவுள்ளன.
தற்போது இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவதால், விமான நிலையத்தில் ஏற்படும் பயணிகளின் நெரிசலைக் கட்டுப்படுத்துவது அவசியமாகியுள்ளது.
ஜப்பானின் நிதியுதவியுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ள இரண்டாவது முனையத்தின் பணிகள் முடிவடைய இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்பதால், பயணிகளுக்கு உடனடித் தீர்வு காணும் நோக்கில் இந்த அவசர மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்காலிக ஏற்பாடாக தனியார் பங்களிப்புடன் 14 புதிய செக்-இன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, நாளொன்றுக்குக் கூடுதலாக 10 முதல் 20 விமானங்கள் வரை கையாளப்பட்டு வருகின்றன.
இந்த 15 பில்லியன் ரூபா திட்டத்தின் கீழ், விமான நிலையத்தின் புறப்படும் முனையம் (Departure Hall) கணிசமாக விரிவுபடுத்தப்படவுள்ளது. அத்துடன் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் குடிவரவு (Immigration) பிரிவுகள் நவீனமயமாக்கப்படவுள்ளன.
மேலும், வருகை முனையம் (Arrivals) புதிய பொலிவுடன் மாற்றியமைக்கப்படவுள்ளதுடன், பயணிகளின் உடைமைகளைக் கையாளும் அதிநவீன லக்கேஜ் சிஸ்டமும் (Baggage Handling) நிறுவப்படவுள்ளது.
இந்த மறுசீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடையும் போது, முதலாவது முனையத்தின் ஆண்டுப் பயணியர் கையாளும் திறன் தற்போதைய 6 மில்லியனில் இருந்து 15 மில்லியனாக உயரலாம் 15 எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், சர்வதேசப் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த தடையற்ற பயண அனுபவத்தை வழங்குவதோடு, தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை ஒரு மிகமுக்கிய விமான போக்குவரத்து மையமாக (Aviation Hub) உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

