ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஒப்பந்தம் இன்று அமல்: பிரெஞ்சு சட்டங்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் என்ன?
ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் ஏப்ரல் 10, 2024 அன்று வாக்களிக்கப்பட்டு, பின்னர் அங்கீகரிக்கப்பட்ட ‘ஐரோப்பிய புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் ஒப்பந்தம்’ (Pacte européen sur la migration et l’asile) இன்று (ஜூன் 12, வெள்ளிக்கிழமை) முதல் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையைக் கடந்து வரும் அகதிகளைக் கட்டுப்படுத்துவதிலும், அவர்களை உறுப்பு நாடுகளுக்கு இடையே பிரித்து வழங்குவதிலும் இந்த ஒப்பந்தம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
மொத்தம் 10 சட்ட வரைவுகளைக் கொண்ட இந்த ஒப்பந்தம் பிரெஞ்சு சட்டங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்ற முழு விவரம் இதோ:
இந்த ஐரோப்பிய ஒப்பந்தத்தை முழுமையாகத் தங்களது நாட்டுச் சட்ட அமைப்பிற்குள் கொண்டு வர பிரான்ஸ் அரசு மிகப்பெரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
பிரான்சின் உள்துறை அமைச்சர் லோரண்ட் நுஞெஸ் (Laurent Nuñez) செனட் சபையில் தெரிவித்துள்ளபடி, பிரான்சின் வெளிநாட்டவர் நுழைவு, தங்குமிடம் மற்றும் அகதிகள் உரிமைச் சட்டத்தின் (CESEDA – Code de l’entrée et du séjour des étrangers et du droit d’asile) சுமார் 40 சதவீதப் பகுதிகள் இந்த ஐரோப்பிய ஒப்பந்தத்தின் காரணமாகக் கடுமையான மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.
ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய அரசாணைகள் வெளியீடு
நாடாளுமன்ற விவாதங்களால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க, பிரெஞ்சு அரசு அவசரச் சட்ட அரசாணைகள் (Ordonnances) மூலமாக இந்த விதிகளப் பிரான்சில் அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வ அரசிதழில் (Journal officiel) பன்னிரண்டிற்கும் மேற்பட்ட புதிய அரசாணைகள் வெளியிடப்பட உள்ளன.
இந்த ஞாயிறு அரசாணைகளில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்கள்:+
எல்லைகளில் புதிய கட்டுப்பாடுகள்: *
பிரான்ஸ் எல்லைகளில் அகதிகள் தஞ்சம் கோருவதற்கான ‘புதிய நடைமுறைகள்’ அறிமுகம் (தங்கும் வசதிகள், அவர்களின் சிறப்புத் தேவைகளை மதிப்பிடுதல், நேர்காணல் முறைகள் போன்றவை).
காலக்கெடு குறைப்பு:°
அகதிகள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் மற்றும் அதற்கான மறுப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் காலக்கெடு (Délais de recours) கணிசமாகக் குறைக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குக் காத்திருக்கும் முக்கிய விதிகள்
இந்த ஒப்பந்தத்தின் மிகக் கடுமையான மற்றும் புதிய உத்திகளைச் செயல்படுத்துவதற்கு மட்டும் பிரெஞ்சு அரசு நாடாளுமன்றத்தின் (Parlement) பச்சைக்கொடிக்காகக் காத்துள்ளது.
கட்டாயக் கைரேகைப்பதிவு (Eurodac):*
எல்லை வழியே நுழையும் அகதிகளின் கைரேகைகளைக் கட்டாயமாகப் பெற்று, அதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘யூரோடாக்’ (Eurodac) தகவல் அமைப்பில் பதிவு செய்யும் முறை.
உடனடித் திருப்பி அனுப்புதல்:
தஞ்சம் கோருவதற்கான தகுதி இல்லாதவர்களின் விண்ணப்பங்களை பிரெஞ்சு அகதிகள் பாதுகாப்பு முகமை (Ofpra) உடனடியாக நிராகரிப்பது மற்றும் எல்லைகளிலிருந்தே அவர்களைத் திருப்பி அனுப்பும் (Retour à la frontière) புதிய நடைமுறைகள்.
Ofpra வின் 2025-ஆம் ஆண்டின் இறுதிப் புள்ளிவிவரங்களின்படி, பிரான்ஸ் எல்லையில் மட்டும் சுமார் 1,600 அகதிகள் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய ஐரோப்பிய ஒப்பந்தம் பிரான்சில் சட்டவிரோதக் குடியேற்றங்களை வெகுவாகக் குறைக்கும் என அரசு நம்பினாலும், மனித உரிமை அமைப்புகள் இதற்குத் தங்களது கவலைகளைத் தெரிவித்து வருகின்றன.

