அநுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவல, தலாவ மற்றும் தம்புத்தேகம பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை குறிவைத்து, பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) எனக் கூறி பணம் பறித்ததாக சந்தேகிக்கப்படும் ஆள்மாறாட்ட கும்பல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சுகாதார அதிகாரிகளின் சீருடையை ஒத்த ஆடைகளை அணிந்து கடைகளுக்குள் நுழைந்த சந்தேகநபர்கள், வர்த்தக நிலையங்களில் காணப்பட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தி பணம் கோரியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
வர்த்தகர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டபோது, குறித்த நபர்கள் உண்மையான PHI அதிகாரிகள் அல்ல என்பது தெரியவந்துள்ளது.
மேலும், அவர்கள் அணிந்திருந்த சீருடைகள் சுகாதார துறையின் உத்தியோகபூர்வ சீருடைகள் அல்ல என்றும், வேறு பிரிவொன்றின் சீருடையை ஒத்திருப்பதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், வர்த்தகர்கள் அதிகாரிகள் எனக் கூறி வருபவர்களின் அடையாள அட்டைகளை சரிபார்க்குமாறும், சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அல்லது சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எப்பாவல மற்றும் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

