சுரேஷ் சாலேக்கு தீவிர மனநல பாதிப்பு இல்லை

சுரேஷ் சாலேக்கு தீவிர மனநல பாதிப்பு இல்லை: மேல்முறையீட்டு நீதிமன்றின் அனுதாபத்தைப் பெறவே மனுத் தாக்கல் – நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் அதிரடித் தகவல்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவற்துறையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேக்கு எந்தவொரு தீவிரமான மருத்துவப் பாதிப்பும் இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

சுரேஷ் சாலியை நிபுணத்துவ மருத்துவர்கள் குழுவொன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தி மருத்துவ அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, கொழும்பு கோட்டை நீதவான் பஸான் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்போது, சுரேஷ் சாலேக்கு போஸ்ட்-டிராமடிக் ஸ்ட்ரெஸ் டிஸார்டர் (PTSD) எனப்படும் அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு, தீவிர மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு இருப்பதாகவும், அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது ஐந்து இடங்களில் சித்திரவதைக்கு உள்ளானதாகவும் அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை சட்டமா அதிபர் திணைக்களம் நிராகரித்துள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் வாதாடுகையில், “கடந்த மே மாதம் 4ஆம் திகதி கொழும்பு முதன்மை நீதித்துறை மருத்துவ அதிகாரி ஊடாக ஊட்டச்சத்து நிபுணர், கண் மருத்துவர் மற்றும் மனநல மருத்துவர் ஆகியோரிடம் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டார். அதுகுறித்த மருத்துவ அறிக்கை மே 18ஆம் திகதியே கிடைத்துவிட்டது. ஆனால், ஜூன் 4ஆம் திகதியான இன்று வரை இரண்டு வாரங்கள் அவர்கள் அமைதியாக இருந்துவிட்டு, திடீரென இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். ஏனெனில், சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றின் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே திட்டமிட்டு இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் குற்றம் சாட்டினார். மேலும், அவர் சாதாரண நபர் அல்லர் எனவும், தற்கொலை குண்டுதாரிகளைக் கையாண்ட ஒரு புலனாய்வு அதிகாரி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த கோட்டை நீதவான் நீதிமன்றம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு இதுதொடர்பான கட்டளையை பிறப்பிப்பதா இல்லையா என்பது குறித்த தனது தீர்ப்பை வரும் ஜூன் 10ஆம் திகதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin