அன்று விசா மறுத்த அமெரிக்கா… இன்று நாசாவிற்குள் சிவப்புக் கம்பள வரவேற்பு!

அன்று விசா மறுத்த அமெரிக்கா… இன்று நாசாவிற்குள் சிவப்புக் கம்பள வரவேற்பு!

சாதித்துக் காட்டிய தமிழக விண்வெளி நாயகன் ஆனந்த் மேகலிங்கம்!

இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் இன்று வளர்ந்து வரும் ஒரு முக்கிய நிறுவனமாக விளங்குவது ஸ்பேஸ் ஜோன் இந்தியா.

 

இதன் நிறுவனரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான டாக்டர் ஆனந்த் மேகலிங்கத்தின் வாழ்க்கைப்பயணம், வழக்கமான ஒரு வெற்றியாளரின் கதையல்ல. பல தோல்விகள், நிராகரிப்புகள் மற்றும் திடீர் திருப்பங்களைக் கடந்து, இன்று அவர் சர்வதேச விண்வெளி அரங்கில் இந்தியாவின் முகமாக உருவெடுத்துள்ளார்.

 

ஆனந்த் மேகலிங்கத்தின் ஆரம்பகால வாழ்க்கை, ராக்கெட்டுகளுக்கோ அல்லது விண்வெளிப் பொறியியலுக்கோ சற்றும் சம்மந்தமில்லாத ஒரு கிராமப்புற சூழலில்தான் தொடங்கியது. ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில், டிராக்டர் ஓட்டுநரின் மகனாகப் பிறந்த அவருக்கு, பள்ளிக்குச் செல்வதே ஒரு பெரும் சவாலாக இருந்தது. தினமும் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று அவர் தனது பள்ளிப் படிப்பை மேற்கொண்டார்.

 

பள்ளிப் படிப்பை முடித்த பின், வேலைவாய்ப்பை உறுதி செய்யும் என்ற நம்பிக்கையில் அவர் கணினி அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், அதில் போதிய ஈடுபாடு இல்லாததால் பாதியிலேயே படிப்பைக் கைவிட்டார் . பின்னர், தனது உண்மையான விருப்பத்தைக் கண்டறிந்து, வானூர்திப் பொறியியல் துறையில் மீண்டும் சேர்ந்தார். இம்முறை வியக்கத்தக்க வகையில் 9.8 CGPA மதிப்பெண்களுடன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

 

இதற்கிடையில், விண்வெளித் துறை சார்ந்த வாய்ப்புகளுக்காக அவர் அமெரிக்காவிற்குச் செல்ல முயன்றபோது, அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்த பெரும் பின்னடைவால் சோர்ந்துவிடாத அவர், “எல்லைகள் மனிதர்களுக்குத்தான், கண்டுபிடிப்புகளுக்கு எந்த எல்லையும் இல்லை” என்ற தாரக மந்திரத்துடன் இந்தியாவிலேயே தனது விண்வெளிப் பணிகளைத் தொடர்ந்தார். அதன் விளைவாக உருவானதுதான் ‘ஸ்பேஸ் ஜோன் இந்தியா’ நிறுவனம்.

 

இவரது நிறுவனத்தின் மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுவது, இந்தியாவின் முதல் நடமாடும் தளத்திலிருந்து ஏவப்பட்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஹைபிரிட் ராக்கெட்டான ‘ரூமி-எச்’ மற்றும் அதனைத் தொடர்ந்த ‘ரூமி-1’ ஆகியவற்றின் வெற்றிகரமான ஏவுதலாகும். இந்த சாதனைகள், இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் இவரது நிறுவனத்திற்கு ஒரு முக்கிய இடத்தை தேடித்தந்தன. தற்போது சென்னையில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு ராக்கெட்டுகளை ஏவும் ‘ரூமி ட்வின்’ திட்டத்திலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

 

பல ஆண்டுகளுக்கு முன்பு விசாவை நிராகரித்த அதே அமெரிக்கா, இவரின் திறமையைக் கண்டு வியந்து, அமெரிக்க வெளியுறவுத் துறையின் சர்வதேச தலைமைத்துவத் திட்டத்தில் உலகளாவிய நிபுணர்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது. இதன் மூலம், புகழ்பெற்ற ‘நாசா’ மையங்களின் பயிற்சிச் சூழல்களில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்ற ஆனந்த் மேகலிங்கம், அங்குள்ள உலகத்தரம் வாய்ந்த விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி, இன்று உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin