காலத்தை வென்ற பத்துப் பெண்கள் : ‘போர்த் து லா ஷப்பல்’ வீதியில் ஓர் உன்னத உலா

காலத்தை வென்ற பத்துப் பெண்கள் : ‘போர்த் து லா ஷப்பல்’ வீதியில் ஓர் உன்னத உலா

பாரிஸ் மாநகரம் வெறும் கல்லாலும் காரையாலும் உருவானதல்ல; அது எண்ணற்ற அரசியல் போராட்டங்களாலும், தத்துவத் தேடல்களாலும், மானுட விடுதலையின் தழும்புகளாலும் வார்க்கப்பட்ட ஒரு திறந்தவெளிப் பெருங்காப்பியம். அந்தப் பெருங்காப்பியத்தின் புதிய அத்தியாயமே, ‘போர்த் து லா ஷப்பல்’ (Porte de la Chapelle) நிலத்தடித் தொடருந்து நிலையப் பெருவெளியில் புதிதாக எழுந்து நிற்கும் பத்துப் பொற்சிலைகள்.

கடந்த ஆண்டு சென் (Seine) நதியின் மடியில் உலகளாவிய பெருவிளையாட்டுத் திருவிழா (ஒலிம்பிக்)அரங்கேறியபோது, நீர்ப்பரப்பிலிருந்து மெல்ல மேலெழுந்து உலகை வியப்பில் ஆழ்த்திய அந்தப் பத்து வரலாற்று நாயகிகளின் சிலைகளும், இன்று உழைக்கும் மக்கள் நாள்தோறும் நடமாடும் ஒரு சாதாரண வீதிக்கு நிரந்தரமாக வந்திருப்பது ஒரு கவித்துவமான வரலாற்று நிகழ்வாகும்.

இந்தச் சிலைகள் வெறும் உலோகக் கலவைகள் அல்ல; அவை பிரான்சிய வரலாற்றின் இருண்ட காலங்களில் ஒளியைப் பாய்ச்சிய தீப்பந்தங்கள். அங்கே உறைந்திருக்கும் ஒவ்வொரு முகமும், ஒரு நெடிய பெருங்கதையைத் தன்னுள் பொதித்து வைத்துள்ளது.

பாரிஸ் வீதிகளில் செந்நிறப் புயல்: லூயிஸ் மிஷேல் (Louise Michel)

லூயிஸ் மிஷேல் (Louise Michel, 1830-1905) – ஆசிரியப் பயிற்றுநர், எழுத்தாளர், புட்சியாளர் பெண்ணியச் செயற்பாட்டாளர்
1830 இல் பிறந்த லூயிஸ் மிஷேல், 1852 இல் ஆசிரியையானார். விக்டர் ஹ்யூகோவுடன் (Victor Hugo) கடிதத் தொடர்பு கொண்டிருந்த இவர், பாரிஸில் குடியரசு, தொழிலாளர் மற்றும் பெண்ணிய வட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டார். 1870 இல் பிரஷ்யர்கள் பாரிஸை முற்றுகையிட்டபோது நகரத்தைப் பாதுகாப்பதில் முன்னின்று போராடினார். 1871 மார்ச் 28 இல் அறிவிக்கப்பட்ட பாரிஸ் கம்யூன் (Commune de Paris) எழுச்சியின் மாபெரும் நாயகியாக விளங்கினார். போர்க்களத்தில் போராளியாகவும், கல்வித்துறையில் சீர்திருத்தவாதியாகவும் அவர் செயல்பட்டார். எதிரிகளால் கைது செய்யப்பட்டு நியூ கலிடோனியாவிற்கு (Nouvelle-Calédonie) நாடு கடத்தப்பட்ட அவர், அங்கும் பழங்குடியினருக்காகப் பள்ளிகளைத் திறந்தார். 1880 இல் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு பாரிஸ் திரும்பிய அவர், இறக்கும் வரை ஒடுக்கப்பட்டவர்களுக்காகத் தொடர்ந்து போராடினார்.

கிலட்டின் மேடையில் ஒலித்த உரிமைக்குரல்:

ஒலிம்ப் து கூஜ் (Olympe de Gouges, 1748-1793) – எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆளுமை
1748 இல் மொண்டோபான் (Montauban) நகரில் பிறந்த மேரி கூஸ் (Marie Gouze), 1773 இல் பாரிஸில் குடியேறினார். ஒலிம்ப் து கூஜ் எனத் தன் பெயரை மாற்றிக்கொண்ட அவர், ஒரு நாடகக் குழுவை உருவாக்கித் தனது முதல் படைப்புகளை எழுதினார். 1784 ஆம் ஆண்டில், அடிமைமுறையைக் கண்டித்து ‘ஜாமோர் மற்றும் மிர்சா அல்லது கறுப்பினத்தவரின் அடிமைத்தனம்’ என்ற நாடகத்தை எழுதினார். ஆனால், இந்த நாடகம் அரங்கேறப் புரட்சிக் காலம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. நாடகங்கள், புதினங்கள், கட்டுரைகள் எனத் தனது இலக்கியப் பயணத்தை அவர் தொடர்ந்தார். கறுப்பின மனிதர்கள் குறித்த தனது சிந்தனைகளை வெளியிட்டதன் மூலமும், கறுப்பினத்தவரின் நண்பர்கள் சங்கத்தின் (Société des amis des Noirs) தலைவர்களோடு பழகியதன் மூலமும் அடிமைமுறைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார்.

புரட்சியின் போது, வேலைவாய்ப்பின்மை, வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளைப் பேசி பல துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். ஆனால், 1791 செப்டம்பரில் மேரி-அண்டோனெட் அரசிக்கு அவர் எழுதிய ‘பெண்கள் மற்றும் பெண் குடிமக்களின் உரிமைகளுக்கான சாசனம்’ மூலமாகவே அவர் புகழ் பெற்றார். “பெண் சுதந்திரமாகப் பிறக்கிறாள், உரிமைகளில் ஆணுக்கு நிகராக இருக்கிறாள்” என்று அவர் முழங்கினார். பெண்களுக்கான குடிமைச் சமத்துவத்தை மட்டுமல்லாமல், அரசியல் உரிமைகளையும் திருமணச் சுதந்திரத்தையும் அவர் கோரினார். 1793 ஜூலையில் கைது செய்யப்பட்ட அவர், நவம்பர் 3 அன்று கிலட்டின் இயந்திரத்தின் மூலம் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். “மரண தண்டனை மேடையேறப் பெண்ணுக்கு உரிமை உண்டென்றால், அரசியல் மேடையேறவும் அவளுக்கு உரிமை இருக்க வேண்டும்.” என்று அவர் மரணத்தின் இறுதி கணத்திலும் முழங்கினார்

சிந்தனை வானில் இருத்தலியல் சுடர்கள்: சிமோன் து பொவார் (Simone de Beauvoir) & சிமோன் வெயில் (Simone Veil)

சமூகக் கட்டமைப்புகள் எவ்வாறு பெண்களைக் கீழிறக்கி வைக்கின்றன என்பதைத் தத்துவத் தளத்தில் தோலுரித்துக் காட்டிய சிமோன் து பொவார், அறிவுலகின் அசைக்க முடியாத சிகரம். அவருடன் இணைந்து வீற்றிருக்கும் சிமோன் வெயில், அரசியல் அதிகாரத்தின் வழி பெண்களின் உடல் சார்ந்த உரிமைகளைச் சட்டமாக்கிய இரும்புப் பெண்மணி. இவர்களது பார்வைகள், கடந்து செல்லும் மக்களின் சிந்தனையில் கேள்விகளை விதைக்கும் வல்லமை கொண்டவை.

இவர்களோடு மேலும் பல மாபெரும் ஆளுமைகள் அங்கு அணிவகுத்து நிற்கின்றனர்:

உலக அரங்கில் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை ஈட்டியெடுத்த அலிஸ் மிலியாட் (Alice Milliat).

கருப்பினப் பெண்களின் குரலை இலக்கியத்தில் ஆழமாகப் பதிவு செய்த பவுலெட் நார்தல் (Paulette Nardal).

ஆண் வேடமிட்டு உலகைச் சுற்றி வந்த முதல் பெண் கடலோடியான ஷான் பாரே (Jeanne Baret).

ஒடுக்குமுறைகளைச் சட்டத்தின் வழி தகர்த்தெறிந்த கிசெலலிமி (Gisèle Halimi).

இந்தச் சிலைகள் பாரிஸின் மையப்பகுதியில் உள்ள செல்வந்தர்கள் வாழும் பகுதிகளில் வைக்கப்படாமல், பல்வேறு நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களும், அன்றாடம் உழைக்கும் மக்களும், பல்வேறு பண்பாட்டுக் கூறுகளும் நிறைந்த ‘போர்த் து லா ஷப்பல்’ பகுதியில் நிறுவப்பட்டிருப்பதுதான் இதன் உச்சக்கட்டச் சுவாரசியம். அதிகாரத்தின் உப்பரிகைகளில் அல்ல, மக்களின் வியர்வை மணக்கும் வீதிகளில்தான் உண்மையான வரலாறு நிலைத்து நிற்கும் என்பதை இந்த முடிவு உலகுக்கு உரக்கச் சொல்கிறது.

பொன்னிறத்தில் மின்னும் இந்தச் சிலைகளின் முன் நின்று நிமிர்ந்து பார்க்கையில், அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வீரமும், தளைகளை அறுக்கும் தத்துவச் செறிவும் காண்போரின் மனதுள் ஊடுருவுவதைத் தவிர்க்க இயலாது.

Recommended For You

About the Author: admin