விமானப் பயணத்தில் உங்கள் பயணப்பைகள் தாமதமானால், தொலைந்தால் அல்லது சேதமடைந்தால் உங்களுக்கான உரிமைகள் என்னென்ன?

விமானப் பயணத்தில் உங்கள் பயணப்பைகள் தாமதமானால், தொலைந்தால் அல்லது சேதமடைந்தால் உங்களுக்கான உரிமைகள் என்னென்ன?

(பாரிஸ் 06.05.2026 sci )
விமானப் பயணத்தின்போது உங்களின் பயணப்பைகள் (Valises / Bagages) தொடர்பாக ஏதேனும் சிக்கல்களைச் சந்தித்தீர்களா? அதற்கான இழப்பீட்டைப் பெறுவதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகள் குறித்துப் பிரான்ஸ் அரசின் பொதுச் சேவைத் துறை வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்கள் இதோ:

பயணப்பைகள் தாமதமாக வந்தால்…

நீங்கள் விமானத்தை விட்டு இறங்கியவுடன் உங்கள் பயணப்பை வரவில்லை, ஆனால் பின்னர் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றால் அது “தாமதமான பை” எனக் கருதப்படும்.

உடனடி நடவடிக்கை: பை வரவில்லை என்றால் உடனடியாக விமான நிறுவனத்தின் பதிவு முகப்பில் புகாரளித்துத் தேடும் பணியைத் தொடங்கச் சொல்ல வேண்டும்.

புகாரளிக்கும் காலக்கெடு: உங்கள் விமானம் Montréal Convention – (ஐரோப்பிய விமான நிறுவனங்கள்) கீழ் இயங்கினால், 21 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமாகப் புகாரளிக்க வேண்டும். ‘வார்சா ஒப்பந்தத்தின்’ (Warsaw Convention) கீழ் வந்தால் 14 நாள்களுக்குள் புகாரளிக்க வேண்டும். (எந்த ஒப்பந்தம் என்பது உங்கள் பயணச் சீட்டிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்).

அத்தியாவசியச் செலவுகள்: உங்கள் பை தாமதமானதால், வேறு வழியின்றி சோப்பு, பற்பசை, உள்ளாடைகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை நீங்கள் வாங்க நேரிட்டால், அதற்கான பற்றுசீட்டுகளைக் கொடுத்து விமான நிறுவனத்திடம் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

பயணப்பைகள் தொலைந்து போனால்…

விமான நிறுவனம் உங்கள் பை தொலைந்துவிட்டதை ஒப்புக்கொண்டாலோ, அல்லது 21 நாள்களுக்குள் (வார்சா ஒப்பந்தமாக இருந்தால் 14 நாள்கள்) உங்கள் பை வந்து சேரவில்லை என்றாலோ அது “தொலைந்துபோன பை” எனக் கருதப்படும்.

எப்படிப் பெறுவது?: உங்களின் பெட்டி மற்றும் அதிலிருந்த பொருள்களுக்கான பற்றுசீட்டுகக்ளை இணைத்து, கடிதம் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் அட்டை இணைக்கப்பட்ட பதிவு அஞ்சல் (Registered post) மூலமாக இழப்பீடு கோரி விமான நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். பற்றுசீட்டுகள் இல்லை என்றால், பையின் எடைக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும்.

பயணப்பைகள் சேதமடைந்தால்…

பயணத்தின்போது உங்களின் பெட்டி அல்லது உள்ளே இருந்த பொருள்கள் சேதமடைந்திருந்தால் அல்லது உடைந்திருந்தால் அதற்கான இழப்பீட்டைக் கோர உங்களுக்கு முழு உரிமை உண்டு.

காலக்கெடு: உடைந்த பொருள்களின் புகைப்படங்கள் மற்றும் அதற்கான பற்றுசீட்டுக்களுடன், பையைப் பெற்ற 7 நாள்களுக்குள் (மாண்ட்ரீல் ஒப்பந்தம்) அல்லது 3 நாள்களுக்குள் (வார்சா ஒப்பந்தம்) எழுத்துப்பூர்வமாகப் புகாரளிக்க வேண்டும்.

எவ்வளவு இழப்பீடு கிடைக்கும்?

உச்சவரம்பு: மாண்ட்ரீல் ஒப்பந்தத்தின்படி ஒரு பயணிக்கு அதிகபட்சமாகச் சுமார் 1,525 யூரோக்கள் வரை இழப்பீடு கிடைக்கும். வார்சா ஒப்பந்தத்தின்படி ஒரு கிலோ எடைக்குச் சுமார் 27 யூரோக்கள் வீதம் கணக்கிடப்படும்.

உங்களின் பொருள்களின் மதிப்பு இந்த உச்சவரம்பை விட அதிகமாக இருந்தாலும், அதிகபட்சத் தொகையே வழங்கப்படும் (பயணத்தின் முன்பே பொருள்களின் மதிப்பைக் குறிப்பிட்டுச் சிறப்புப் பதிவு செய்திருந்தால் தவிர). மேலும், பழைய பொருள்களுக்குப் புதிய பொருளுக்கான முழு விலையும் கிடைக்காது, தேய்மானத் தொகையைக் கழித்து விட்டே இழப்பீடு வழங்குவார்கள்.

விமான நிறுவனம் இழப்பீடு தர மறுத்தால் என்ன செய்வது?

முதலில் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு சுமூகமாகப் பேசித் தீர்க்கவே அரசு அறிவுறுத்துகிறது.

2 மாதங்களுக்கு மேல் எவ்வித பதிலும் இல்லையென்றாலோ அல்லது உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலோ, ‘சுற்றுலா மற்றும் பயண மத்தியஸ்தரை’ (Médiateur Tourisme Voyage) அல்லது ‘ஐரோப்பிய நுகர்வோர் மையத்தை’ நீங்கள் அணுகலாம்.

சட்ட நடவடிக்கை: இந்த முயற்சிகளும் தோல்வியடைந்தால், உங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்காக 2 ஆண்டுகளுக்குள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.

Recommended For You

About the Author: admin